Senthil Murugappa

Father’s Name: Meyyappan

Hometown: Virachilai

Kovil & Pirivu: Illayathankudi/Kalanivasal

Education: M Optometry

Spouse Name: Meenu Muthiah

Spouse Birthtown: Melaisivapuri

E-mail ID: sentil_m@hotmail.com

Business: Optometry Retail Practice

Company name & Address: Ashika Visions Pty Ltd, 249 Argent Street, Broken Hill, NSW 2880

Awards/Recognition /Membership:

  • Awarded “Leaders of the New Dawn” in 2011.

  • Member of New South Wales Chamber of Commerce.

கண்ணே கருமமாய்– செந்தில்

கருமமே கண்ணாயினார் என்று படித்து இருப்போம். நம்மவர் ஒருவர், திரு. செந்தில் முருகப்பா, ஆஸ்திரேலியாவின் ஒரு கடைக்கோடியில் (Broken Hill, New South Wales ) கண்ணே கருமமாய் (தொழிலாய்) இருக்கிறார் என்று கேட்டபோது ஆச்சரியமாய் இருந்தது.

நம்மவர்கள் பொதுவாக கை பழகாத துறையான ஆப்டோமெட்ரி (Optometry) துறையில், அதுவும் அயல் நாட்டில், சிறப்பாக தொழில் செய்து கொண்டு இருக்கிறார், விராச்சிலையை சேர்ந்த செந்தில் முருகப்பா.

செந்தில் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தகப்பனாருக்கு இந்தியன் வங்கியில் வேலை. எல்லா மத்தியதர குடும்பத்தினரைபபோலவே “வம்பு தும்புக்கு” போகாத அமைதியான, பாதுகாப்பான வாழ்க்கை. பொறியியலில் ஒரு பட்டம், ஏதேனும் MNCல் ஒரு வேலை, சமயம் பார்த்து அமெரிக்க பயணம், மேல் படிப்பு, அமெரிக்காவில் வேலை, பிறகு நல்ல இடத்தில் ‘நல்லா வாங்கி’ ஒரு கல்யாணம் என்று சமூகம் சிந்திக்க தொடங்கி இருந்த போது, செந்தில் வித்தியாசமாக சிந்தித்தார்.

பிற்காலத்தில் பிரபலமாக கூடிய ஒரு துறையில் இப்போதே கால் பதிக்க நினைத்து இருக்கிறார் செந்தில். 25 வருடங்களுக்கு முன்பு, 1991ல், ஆப்டோமெட்ரி என்பது அவ்வளவாக பிரபலமாகாத துறை மட்டுமில்லை, இந்தியாவில் அதை முழு நேரப் பட்ட படிப்பாக கற்றுக் கொடுக்க ஒரே ஒரு கல்லூரி மட்டுமே இருந்தது என்கிறார் செந்தில்.

ஆப்டோமெட்ரி, பிற்காலத்தில் பிரபலமாகக் கூடிய ஒரு துறை என்ற செந்திலின் “மாற்றி யோசி” எண்ணம் இந்த 25 வருடங்களில் நிதர்சனமாய் ஆகி இருக்கிறது என்பதற்கு தற்போது இந்தியாவில் ஆப்டோமெட்ரிக்கு என்றே 55க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருப்பதே சாட்சி.

அப்பச்சி வங்கி பணியில் இருந்தாலும் கூட, ஆயா வீட்டு அய்யாவும், அப்பத்தா வீட்டு அய்யாவும் சொந்தத் தொழிலில் முதலாளிகளாய் இருந்ததாலோ என்னவோ , செந்திலுக்கு தொழில் ஆர்வம் எப்பொழுதுமே இருந்து இருக்கிறது . ஆனால் செந்தில், தான் சார்ந்த துறையில் மேன்மை அடைந்த பின் தொழிலில் இறங்குவதுதான் வெற்றியை தரும் என்று முடிவுக்கு வந்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி இருக்கிறார்.

தொழில் தொடங்கத் தேவையான முதலைத் தானே திரட்ட வேண்டும் என்ற வைராக்யத்துடனும், தொழில் சார்ந்த அறிவை பெருக்கிக் கொள்ளும் நோக்கத்துடனும், ஆப்டோமெட்ரி துறையில் பணியை தொடங்கி இருக்கிறார். “மாற்றி யோசி” என்று புதிய சிந்தனைகள் இருந்தாலும், நகரத்தார்களுக்கே உரிய நிதானத்துடன் ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்து தனது நோக்கை அடைந்து இருக்கிறார் செந்தில். இந்தச் சமயத்தில்தான் சென்னை வாசம் முடிவுக்கு வருகிறது.

1995 முதல், 2000 வரை, 5 வருடங்கள் புனேயிலும், கோவாவிலுமாக பணியிலிருந்து, பலவகையான தொழில் அறிவையும் சிறிய அளவிலான நிதியையும் பெற்ற பின் அடுத்த இலக்கு, அதிகப்படியான நிதி மற்றும் உலக அனுபவம். அதை அடைய குவைத்தில் 3 வருடங்கள் பணி. ஓரளவுக்கு நிதி சேர்ந்தாயிற்று அடுத்து தொழில்தான் என்று நினைத்தால், செந்தில் தான் “மாற்றி யோசி” ரகமாச்சே. இதுவரை அவர் பெற்றது கள அறிவும் மட்டும்தான். ஆப்டோமெட்ரி துறை உச்ச தொழில் நுட்பத்தில் இருக்கும் மேலை நாடுகளில் ஏதேனும் ஒன்றில் போய் உயர் கல்வி கற்க தீர்மானிக்கிறார் செந்தில். சிட்னியில் உள்ள University of New South Walesல் பட்ட மேற்படிப்புக்கு சேர்கிறார். மேற்படிப்பு முடிந்தது. கடனோ உடனோ படாமல், வேறு யாருடைய நிதி உதவியும் இல்லாமல், தானே சொந்த காசில் வெளி நாட்டில் உயர் கல்வி கற்றது செந்திலது முதலாவது வெற்றி. இந்த உயர் கல்வியும், இதுவரை பெற்ற அனுபவ அறிவும் மட்டும் மூலதனம் ஆகிவிடுமா?

மீண்டும் அதே வைராக்கியத்துடன், நிதி சேர்ப்பில் இறங்குகிறார் செந்தில். ஊர் பேர் தெரியாத வெளி நாட்டில் நிதி சேர்ப்பது எப்படி? மீண்டும் வேலை. ஆனால் இதில் ஒரு சறுக்கல். ஒரு பதிவு பெற்ற ஆப்டோமெட்ரிஸ்ட் ஆக (licensed Optometrist) பணியாற்ற வேண்டுமெனில் மூன்று நிலை கொண்ட ஒரு தேர்வு எழுத வேண்டும். அது ஒரு மிக கடினமான தேர்வாய் இருந்து இருக்கிறது. எடுத்து கொண்ட லட்சியத்தை அடைய வேண்டி, நிறையவே சமரசம் செய்து கொண்டு, தனது துறை சம்பந்தபட்ட ஆனால் படிப்புக்கு பொருத்தமில்லாத விற்பனைப் பணியில், 3 வருடங்கள் Adelaide நகரில் சிரமப்பட்ட செந்தில், வெற்றிகரமாக தேர்வை பாஸ் செய்து பதிவு பெற்ற ஆப்டோமெட்ரிஸ்ட் ஆகி விட்டார்.

அடுத்து ……………. தொழில்தானே? இருங்க பாஸ். 3 வருடம் சிரமம் கைக்கும் வாய்க்கும் சரியா போயிருச்சில்ல. செந்தில் மிகுந்த நம்பிக்கையுடன் மீண்டும் களம் இறங்குகிறார். பதிவு பெற்ற ஆப்டோமெட்ரிஸ்ட் என்பது ஒரு நல்ல டிமாண்ட் உள்ள வேலை மட்டுமல்ல, இந்த அத்திப்பட்டி மாதிரி ஊருக்கு போனால், கை நிறைய காசு என்பதால், வெப்பம் மிகுந்த Darwin என்ற ஊரில் பணியில் அமருகிறார். தனது ஆப்டோமெட்ரிஸ்ட் வேலையை மட்டும் பார்த்து கொண்டு இருந்தவர் ஒரு சந்தர்ப்பம் அமைந்த போது மிகச் சரியாக அதை பயன் படுத்தி கொண்டு மேலாளர் நிலைக்கு உயர்கிறார். பொதுவாக மேலை நாடுகளில் தொழில்நுட்ப வல்லுநர் என்றால் அந்த வேலையை மட்டும் தான் செய்ய வேண்டும். நிர்வாகத்துக்கென்று தனிப் படிப்பு, தனி பயிற்சி வேண்டும். மிகுந்த பிரயாசைப் பட்டு அந்த பணியை எடுத்துக் கொண்டதற்கான காரணம், தொழில் தொடங்க தொழில்நுட்ப அறிவு மட்டும் பத்தாது, நிர்வாக அறிவும், நிதி மேலாண்மையும் தெரிந்து இருக்க வேண்டும் என்ற உணர்வுதான் என்கிறார் செந்தில். அவர் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின் அந்த கிளையின் நிலைமையே தலை கீழாக மாறிவிட்டது. மிகவும் சாதாரணமாக இருந்த கிளையை , அந்த பிராந்தியத்திலேயே அதிக விற்பனையுடையதாகவும், அதிகமான நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ள கிளையாகவும் மாற்றி காட்டியதினால், Leaders of the New Dawn என்ற விருது பெற்றார் செந்தில்.

அந்த மேலாளர் அனுபவம் தனக்கு நிறைய கற்றுத் தந்ததாக சொல்லும் செந்தில், அந்த விருது தனது உழைப்புக்கு கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரமாய் கருதுகிறார். செந்திலின் “மாற்றி யோசி” சித்தாந்தத்தில் இன்னுமொரு அணுகுமுறை என்னவென்றால் இதுவரை யாரும் போகாத புதிய இடத்தில் கடை விரிப்பது. அதன்படி, Adelaide நகரில் இருந்து 500 KM தொலைவில் உள்ள Brokenhill என்ற 20,000 மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய நகரத்தில் ஆப்டோமெட்ரிஸ்ட் பணியில் அமர்கிறார். Darwin நகரில் பார்த்து கொண்டு இருந்த மேலாளர் நிலையில் இருந்து ஒரு படி கீழே என்றாலும், நகரை பழகுவதற்காக அந்த வேலையை எடுத்துக் கொண்டு, தனது லட்சியமான சொந்த தொழில் என்ற இலக்கிற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.

அதே சமயம், ஆஸ்திரேலியாவில் Franchise என்ற புதிய business concept ஆப்டோமெட்ரி துறையில் பிரபலமாகிறது. செந்தில் வேலை செய்து கொண்டு இருந்த OPSM நிறுவனம் தங்களது வியாபாரத்தையும் Franchise மாடலுக்கு மாற்ற முடிவய செய்த போது, செந்தில் காத்திருந்த சந்தர்ப்பம் கைகூடி வந்து விட்டதை உணர்ந்து கொண்டு, அவர் வேலை செய்து கொண்டிருந்த ஸ்டோருக்கு, Ashika Visions Pty Ltd, என்ற பெயருடன் Franchise உரிமையாளரானார்.

தான் எடுத்து கொண்ட லட்சியத்தை, அடி மேல் அடி எடுத்து வைத்து அடைந்து விட்ட திருப்தியில் இருக்கும் செந்தில், பிரான்ச்சைஸ் ஆரம்பித்த இந்த ஒரு வருட காலத்திலேயே, 5 ஊழியர்களின் உதவியுடன், Ashika Visions, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையில் முதல் இடத்தில் இருப்பதாக பெருமிதம் கொள்கிறார். இந்த புதிய பயணத்தில் அடுத்தடுத்தாற் போல செய்வதற்கு நிறைய திட்டங்கள் வைத்து இருக்கிறார் செந்தில். Brokenhill மாதிரி இன்னுமொரு சிறிய நகரத்தில், Ashika Visionsன் இரண்டாவது கிளையை தொடங்கிவிட்ட செந்தில், பல franchise கடைகளை சொந்தமாக்கும் நம்பிக்கையுடன் புதிய நகரங்களையும் தேடிக் கொண்டே இருக்கிறார்.

முன் நிற்கும் சவால்கள் எவை என்று கேட்ட போது, கடுமையான தொழில் போட்டி, (ப்ரோகென்ஹில் போன்ற சிறிய நகரிலேயே மூன்று ஆப்டோமெட்ரி கடைகளாம்), கடை ஊழியர்களை தக்க வைத்து கொள்வது, வாடிக்கையாளர் திருப்தி (சிறிய கவனக்குறைவுக்கு கூட கோர்ட்டுக்கு இழுத்து விடுவார்கள்) என்று பட்டியல் இடுகிறார் செந்தில்.

தகப்பனார் திரு மெய்யப்ப செட்டியார் அவர்கள் இளவயதிலே எந்த ஒரு காரியத்தையும் சுயமாய் சிந்தித்து சுயமாய் முடிவு எடுக்க பழக்கியது இன்றளவும் தனக்கென்று ஒரு தனித்துவத்தை தருவதாய் பெருமை கொள்ளும் செந்தில், தாயார் திருமதி வள்ளியம்மையின் அறிவுரையான ‘எல்லோரிடமும் அனுசரித்துப் போக வேண்டும்’ என்பது, இதைப் போன்ற போட்டி மிகுந்த தொழில் சூழலில் மிகவும் உதவியாய் இருப்பதாய் பாசத்துடன் நினைவு கூறுகிறார்.

உடன் பிறந்த அண்ணன், திரு. சொக்கலிங்கம் இளவயது முதலே தனக்கு ஒரு உத்வேகமாய் இருப்பதாக கூறும் செந்தில், சிட்னி வாழ் நகரத்தார் திரு அண்ணா சுந்தரம் அவர்கள் தனக்கு ஒரு வழி காட்டி மட்டுமல்ல தன் குடும்பத்தாரைப் போன்றே தனது முன்னேற்றத்தில் மிகவும் அக்கறை கொண்டவர் என்று நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

உங்களுக்கு தூண்டுதல் (inspiration) உங்கள் அண்ணன், நீங்க யாருக்காவது தூண்டுதலாக இருந்திருக்கிறீர்களா என்று கேட்ட போது, “எனக்கு தெரியவில்லை ஆனால், பெற்றோர்கள் வேறு துறைகளில் இருந்தாலும் என்னை ஒரு முன் உதாரணமாய் எடுத்து கொண்டு, நிறைய இளைஞர்கள் ஆப்டோமெட்ரி துறைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். இதுதானே தூண்டுதல் என்று நம்மை திருப்பி கேடடார் செந்தில்.

தன்னிடம் உள்ள சான்றுகளின் படி, ஆப்டோமெட்ரி துறைக்கு தான் முதல் நகரத்தார் என்பதில் பெருமை கொள்ளும் செந்தில், இப்போது இளைஞர்களின் பார்வை இந்தத் துறையை நோக்கி திரும்பி இருப்பது நம்பிக்கையூட்டுகிறது என்கிறார்.

மனைவி மீனா மற்றும் மூன்று பிள்ளைகளின் ஆதரவு, தனது எல்லா முயற்சிகளுக்கும் பக்கபலமாய் இருந்தது என்றார்.

ஆஸ்திரேலியாவிலும், பிற நாடுகளிலும் புதிய தொழில் முனைவோருக்கான வாய்ப்புள்ள தொழில்கள் பற்றி பேச்சு வந்த போது, “சுகாதாரத்துறை” (Health sector) நிறைய வாய்ப்புகள் கொண்டது என்றார். தன்னுடைய வாழ்க்கை முழுதும் சுகராத்துறையைச் சுற்றியே இருப்பதால் தனக்கு வேறு துறைகளைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று அடக்கமாய் சொன்ன செந்தில், ஆனால் “சுகாதாரத்துறை” எதிர்காலத்தில் பல புதிய பரிமாணங்களை காணும் என்றார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை முதியோர் பராமரிப்பு வேகமாக வளர்ந்துவரும் துறை மட்டுமல்ல, மனிதவளப் பற்றாக்குறையும் இருக்கிறது என்றார்.

புதிதாய் தொழில்முனைவோருக்கு தனது “மாற்றி யோசி” என்ற தாரக மந்திரத்தையே உபதேசிக்கும், செந்தில், மாற்றி யோசித்தால் மட்டும் போதாது, செய்யப் போகும் தொழிலைப்பற்றிய அறிவைப் பெருக்கி கொள்ளவேண்டும், இணக்கமுள்ள அணுகுமுறை, வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவது போன்ற குணங்கள் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்கிறார்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய நமது அய்யாக்களை நினைவூட்டுகிறார் செந்தில்.

பேட்டியும் எழுத்தும், சு.காசி விசுவநாதன், வேந்தன்பட்டி.