AL. GANESAN

Father’s Name: G.Alagu Sundaram

Family/House Name: RM.M.R.House

Hometown: Keelasevalpatti

Kovil & Pirivu: Mathur Urayur

Education: B.TECH- Computers

Spouse Name: Eligible Bachelor

Address in India: 17 A/60 Mannarkudi Street, Chidambaram 608 001

E-mail ID: alg@taginfosolutions.com

Website: www.taginfosolutions.in

Business: Software Development

Company name & Address: TAG INFO SOLUTIONS India Pvt Ltd - “BALAMBIGAI TOWERS”, 30/24, 2nd cross, Gandhi Nagar, Chidambaram- 608001

Membership: Member of Nagarathar Chamber of Commerce-Chennai

நம்பிக்கை நேசன்!

பேருந்தின் கடைசி சீட் போல வாழ்க்கை, திடீர் திடீரென தூக்கி அடித்துவிடுகிறது. அடுத்த நொடி நடக்கப் போவது தெரியாமல் இருக்கிற சுயவாழ்க்கையைப் போன்றதொரு சுவாரஸ்யம், வெளியே எங்கேயும் கிடைத்து விடாது. சிதம்பரத்தைச் சேர்ந்த கணேசனின் வாழ்க்கை அத்தகையது. முப்பது வயதில் 50 குடும்பங்களை வாழவைக்கும் தொழிலதிபராக இருக்கிறார் கணேசன்.

மென்பொருள் உருவாக்கும் துறையில் 48 பணியாளர்களுடன் இயங்கும் அலுவலகங்களைச் சென்னையிலும், சிதம்பரத்திலும் நடத்தி வருகிறார். பல்வேறு தொழில்களுக்குத் தேவைப்படும் மென்பொருளை உருவாக்கித் தந்து அவர்களின் வேலையைச் சுலபமாக்கும் தொழில் அவருடையது. இதையெல்லாம், செய்து கொண்டிருக்கும் கணேசனுக்குக் கண் பார்வை கிடையாது.

திகைப்பும், வியப்புமாக அவரைப் பார்த்து, ‘எப்படி இது சாத்தியம்..?’ என்கிறோம். குரல் வந்த திசை நோக்கிப் புன்னகையோடு, கேட்கிறார். ‘‘தொழில் வளர்ச்சியா… பார்வை இல்லாமல் அதை நான் சமாளிக்கும் விதமா..?’’

அவரே தொடர்ந்தார்.

‘‘எனக்குப் பிறவியிலேயே கண்ல சின்னதா பார்வை பிரச்னை இருந்தது. அப்பா அழகு சுந்தரம், தூத்துக்குடியிலே பேங்க் வேலையிலே இருந்தாங்க. அய்யா, அப்பத்தாவுக்கு மயிலாடுதுறை. ஆறு மாதக் குழந்தையா இருக்கும்போது, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையிலே அந்தக் குறைபாட்டைப் போக்க ஆபரேஷன் செய்திருக்காங்க. ஆனா, அது குணமாகாம, இடது கண்ல பிரச்னையை ஏற்படுத்திடுச்சு. வலது கண்ணுக்கும் பரவ ஆரம்பிக்க… டாக்டர்கள் அவசரமா ஒரு முடிவெடுத்து, வலது கண்ணை மட்டும் குணமாக்கினாங்க. வீட்லயும் ‘சரி, ஒரு கண்ணாவது நல்லாத் தெரிஞ்சாப் போதும்’ன்னு ஆறுதல் அடைஞ்சாங்க. ஒரே பையன். குறை தெரியாம, நல்லாப் பார்த்துக்கிட்டாங்க. ஆனா, தினம் தினம் எங்கம்மா எனக்காக வேண்டாத தெய்வமில்லை.

படிப்புல கில்லாடி. பத்தாவது படிக்கும்போதே எனக்கு லேப்டாப் வாங்கித் தந்துட்டாங்க அப்பா. சிஸ்டத்தை வெச்சு எனக்குத் தேவையான டாக்குமென்ட்ஸ் ரெடி பண்றது, எதையாவது புதுசா முயற்சி பண்றதுங்கிறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. பிளஸ்டூ முடிச்ச உடனே, ‘பையன் சிதம்பரத்துக்குள்ளேயே இருந்தா, பெரிய வளர்ச்சி இருக்காது!’ன்னு யோசிச்ச அப்பா, காரைக்காலிலே இருக்கிற பாரதியார் பொறியியல் கல்லூரியிலே பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்த்து விட்டார்.

பல்வேறு மொழி பேசற பசங்ககூட பழகஎனக்கு வாய்ப்பு கிடைச்சது. சர்வதேச அளவிலே கம்ப்யூட்டர் பத்தின அறிவு எனக்குக் கிடைக்க அந்த நாட்கள் காரணமா இருந்தது. அதுபோக, வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டபோது, வேலையிலே ஏற்படற பல வியத்தகு மாற்றங்கள் பற்றி அப்பா எனக்குச் சொல்லுவார். ஆர்வமா கேட்பேன். வீட்டிலே ஒரே பையன்ங்கிறதால, எல்லா விஷயத்தையும் அவர் என்கிட்டே ஷேர் பண்ணிட்டே இருப்பார். நம்ம துறை கம்ப்யூட்டர் துறைதான்னு நான் முடிவு செய்ய இதெல்லாம்தான் காரணமா அமைஞ்சது.

அப்படி இருக்கும்போது, 2005 ஆம் ஆண்டில், காலேஜ்ல என்னோட ப்ரீ பைனல் இயர் சமயத்திலே, ஒரு பஸ் ஆக்ஸிடெண்ட். வலது கண்ணுல அடி. அதுக்காக ஆபரேஷன் பண்ணினாங்க. அதிலே, குளுக்கோமா பிரஷர் அதிகமாகி, கண் நரம்புகளை பாதிச்சிடுச்சு. வலது கண் பார்வையும் சுத்தமா போய்டுச்சு. அதுக்கான சிகிச்சை இப்போ எடுத்துட்டிருக்கேன். இந்த உலகத்தைத் திரும்ப பார்க்கிற வாய்ப்பு இருக்கும்ன்னு நம்பறேன்…’’ என்று சொன்னார்.

தூக்கி எறியப்படும் தருணங்களில்தான், பறவைக்கு சிறகை விரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கணேசனுக்கும் அது நடந்திருக்கிறது.

‘‘ஏற்கனவே ஒரு கண் இல்லாம காலம் தள்ளியாயிற்று. அப்போது, பார்த்தது, படித்தது, கேட்டது எல்லாம் பதிவுகளாக மனதில் இருக்கும்போது, எதற்காக கவலைப்பட வேண்டும்..? என்ன, இனிமேல், சிதம்பரம் – காரைக்கால் சாலையில் கார் ஓட்ட முடியாது. ஓடும் பஸ்ஸில் தாவி ஏற முடியாது. நாமே தட்டில் எடுத்து வைத்து சாப்பிட முடியாது… இப்படிச் சின்னச் சின்ன விஷயங்கள்தானே! சமாளிப்போம் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது.

டெக்னாலஜி வளர்ச்சி காரணமா, எழுத்துக்களைச் சத்தம் கொண்டு உணர்கிற வாய்ப்பு என் கைக்கருகே இருந்தது. கண் பார்வை இருந்தபோதே, நான் மொபைல், மெயில் இவற்றிலெல்லாம் பரிச்சயம் பெற்றிருந்ததால், மெயில் அனுப்பவோ, இணையதளங்களைப் படிக்கவோ எனக்கு யாரோட உதவியும் தேவைப்படலே! இந்த உலகத்தை, ஓசையால உணர்ற அனுபவம் எனக்குக் கிடைச்சிருந்தது’’ என்றார் கணேசன்.

குழந்தைக்குக் காய்ச்சல் வந்தால், குடும்பமே துவண்டு போகிற வீடுகள் பல உண்டு. ஆனால், இவரது பெற்றோர் இவரைப் பார்த்து இடிந்து போகாமல், அடுத்தடுத்து நடப்பதில் அக்கறை காட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர். ‘எதுக்கும் காத்திருக்க வேண்டாம். நாங்க இருக்கோம். நீ என்ன திட்டம் வைத்திருந்தாயோ, அதை நோக்கிச் செயல்படு!’ என ஊக்கமளித்துள்ளனர்.

‘‘ஒரு ஐ.டி கம்பெனி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லி அதைப் பதிவு செய்யப் போனபோது, கடலூர், சிதம்பரத்திலே அதுக்கான அடிப்படை ஏதும் இல்லே. அதைத் தொடர்ந்து, சென்னை வந்து, அப்பாவோட நண்பரா இருந்த ஆடிட்டர் உதவியோட நிறுவனத்தைப் பதிவு செய்தேன். பொதுவா, கணக்குகளை மெயின்டெய்ன் பண்ற சாஃப்ட்வேர்களுக்கான தேவைதான் அதிகமா இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டு, அந்தத் துறையிலே இறங்க முடிவெடுத்தேன்…’’ என்று தனது நிறுவனத் துவக்கம் பற்றிச் சொன்ன கணேசன், அதன் செயல்பாடுகள் பற்றியும் சொன்னார்.

‘‘ஆகஸ்ட் 2009 ஆம் ஆண்டில் தொழிலைத் தொடங்கினோம். 3 ஊழியர்களோட ஆரம்பிச்சோம். ரெண்டு மாத அலைச்சலுக்குப் பிறகு, ஒரு வெப்சைட் ஆர்டர் கிடைச்சது. முதல் புராஜெக்ட் அதுதான். அப்புறம் ஒரு காலேஜ்ல பேசி, அவங்களுக்கான மென்பொருளை உருவாக்கித் தந்தோம். மாணவர்களோட டேட்டா பேஸ் உருவாக்கினோம். ஆவரேஜ் மார்க் என்ன..? ஒவ்வொரு சப்ஜெக்ட்லயும் டாப் 5 யாரு… எந்த செட் மாணவர்கள் எதிலே வீக்கா இருக்காங்க..? சீட் மேனேஜ்மென்ட் எப்படி…ன்னு பல வகை டேட்டாக்களை அவங்களுக்குக் கொடுத்தோம். ரொம்ப திருப்தி ஆகிட்டாங்க. நாங்களும்தான். எங்களுக்கே எங்க மேல நம்பிக்கை வந்தது இதுக்கப்புறம்தான்.

சிதம்பரத்தில் இருந்து, சென்னைக்குப் போனால் அடுத்த கட்ட வளர்ச்சி இருக்கும்ன்னு தோணுச்சு. ரீடெய்ல் பிஸினஸ்க்குத் தேவையான மென்பொருளை உருவாக்கினோம். அதாவது, பல்வேறு ஊர்களில் நடக்கும் ஒரு பிஸினஸை, அதன் நிர்வாகி எந்த ஊரில் இருந்தும் கண்காணிக்கும்படியான சாஃப்ட்வேர் அது. கிளை வாரியாக, எங்கே என்ன விற்பனை நடக்குது… எங்கே பொருட்கள் தேங்கி நிற்குது… அதுக்கான தேவை வேற எந்த இடத்திலே இருக்கு..?ன்னு ஒரே ஒரு தேடு வார்த்தையைக் கொண்டு கண்டுபிடிச்சுட முடியும். நிர்வாகிக்குத் தன் வியாபாரம் பற்றிக் கூடுதல் பலம் கொடுக்கிற இந்த மென்பொருளைக் குறிப்பிட்ட நிறுவனத்துக்காக செய்து கொடுத்ததிலே, நல்ல பேரும், வருமானமும் கிடைச்சது…’’ என்றவர், திருப்புமுனை தந்த தொழில் வாய்ப்பு பற்றிச் சொன்னார்.

‘‘இந்த நிலையிலே ரதி மீனா (ஆம்னி) டிராவல்ஸ்-சுக்கு மென்பொருள் தயாரிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சதுதான் திருப்புமுனை. ஒருமுறை அந்த பஸ்ல சென்னை வர்றப்ப, வண்டிக்குள்ளே ஒனரோட செல்போன் நம்பர் குறிப்பிடப்பட்டிருந்தது. கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கியது அந்த டிராவல்ஸ். டிராவல்ஸின் டைரக்டர் சங்கர் அவர்களைச் சந்திச்சேன். ‘உங்க கணக்குகளை எளிமையாக்கித் தர்றேன். மாதாந்திர டீசல் செலவு எவ்வளவு..? ஒரு பஸ்ஸூக்கு ஆகும் பராமரிப்புச் செலவு எவ்வளவு..? சொத்து பராமரிப்பு, ஊழியர் நிர்வாகம், சம்பளத்துக்கும் டிக்கெட் விற்பனைக்குமான ஒப்பீடு என்ன..? என்று எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளும் வகையில் ஒரு மென்பொருளைத் தயாரித்துத் தரட்டுமா..? என்று கேட்டேன். என்னை வரச் சொன்னார். முதல் பார்வையிலே அவர் நம்பலை. தயங்கினார்.

‘மற்றவங்க ஒரு விஷயத்திலே தோத்தா, அதுக்கு வெவ்வேற காரணங்கள் இருக்கலாம். ஆனா, நான் தோத்தா அதுக்கு என்னோட தனிப்பட்ட குறைபாடு மட்டும்தான் காரணமா இருக்கும். அதனால், இதிலே நான் ரொம்பக் கவனமா அக்கறையோட செயல்படுவேன். உங்க தேவையைச் சொல்லுங்க. நான் குடுத்த வாக்குறுதியை செயல்வடிவமாக்கித் தர்றேன். உங்க தகவல் பாதுகாப்புக்கும் நான் கியாரண்டி’னு சொன்னேன். முதல்ல, என் தோற்றத்தை அவநம்பிக்கையோட பார்த்த அவர், என் வார்த்தைகளை நம்பிக்கையோட பார்த்தார். நாங்க தந்த எளிமையான மென்பொருள் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. இன்னிக்கு வரை 56 கிளைகளிலே எங்க மென்பொருள்தான் பயன்படுத்தப்படுது.

விகடன் நிறுவனத்தில் டிஜிட்டல் லைப்ரரி மேலாண்மைக்கான தேவை ஏற்பட்டபோது, எனது ஊழியர்களை அங்கே அனுப்பி அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற மென்பொருளை வடிவமைத்துத் தந்தேன்.

என்னோட, ‘டேக் (TAG) இன்ஃபோ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம், இப்போ வெளி நாடுகளிலும் சேவையை விரிவாக்கி இருக்கு. சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள கிளையண்ட்களுக்கு சர்வீஸ் பண்ணித் தர்றோம். 250 பிராஜெக்ட்டுக்கு மேல பண்ணியாச்சு. 125 வாடிக்கையாளர்கள் இருக்காங்க. உலகம் முழுக்க மென்பொருள் சேவைக்கான சிறந்த நிறுவனமா வளரணும்ங்கிறது என்னோட ஆசை!

ஐ.டி துறையில் எந்தத் தேவைக்குமான கண்டுபிடிப்புகளையுமே நாம் உருவாக்கிவிட முடியும். எதுவுமே முடியாது என்ற நிலையில் இல்லை… எந்தத் துறைக்கான தேவைகளையும் நிறைவேற்றித் தரும் அளவுக்கு, தொடர் ஆராய்ச்சிகளைச் செய்து வரும் டீம் எங்களிடம் இருக்கிறது…’’ என்று உறுதிபடச் சொல்கிறார் கணேசன். வீடு, அலுவலகம் என முடங்கிப் போகாமல், வாரத்தில் இரண்டு நாள் சிதம்பரம், இரண்டு நாள் சென்னை மற்ற நாட்களில் வெளியூர், வெளிமாநிலம், வெளி நாடுகள் என்று எங்காவது பறந்து கொண்டே இருக்கிறார். அண்மையில் துபாயில் ஒரு பெரும் ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

வாழ்க்கையின் வலியைப் புரிந்து கொண்ட கணேசன், ‘நல்லவனுக்கு நல்லதே நடக்கும்!’ என்ற கிறுக்கு வசனத்தை, நம்புவதே இல்லை. தன் கையே தனக்குதவிதான் இவரது தத்துவம்.

பரம்பரையாக வட்டித் தொழிலிலும், அடகுத் தொழிலிலும் ஈடுபட்டவர்கள் நகரத்தார். அவர்களுக்கு என்று ஒரு மென்பொருளைக் கண்டுபிடிப்பது சிறப்பானதுதானே! வட்டிக் கணக்கை எழுதவும், அடகு நகை குறித்த விவரங்களைப் பெறவும் நாள் வாரியாக வட்டியைக் கணக்கிடவும், அதற்கான நோட்டீஸ் அனுப்பவும், வாடிக்கையாளர் ஒவ்வொருவரின் கடன் தொகையைக் கணக்கிடவும் உதவும் மென்பொருளைக் கண்டுபிடித்து அளித்துக் கொண்டிருக்கிறார். கைகளில் எழுதும்போது ஏற்படும் குறைகளைப் போக்க உதவும் சாஃப்ட்வேராக இதை உருவாக்கி உள்ளார். சில்லறை வர்த்தக நிறுவனங்கள், ஆப்டிகல்ஸ், ஹோட்டல்கள்… என்று ஒரே மாதிரியான தேவையைக் கொண்ட பலருக்கும் பயன்படும் இதுபோன்ற ‘புராடக்ட்’களை மார்க்கெட்டிங் செய்யும் அணியை உருவாக்க முயற்சித்து வருகிறார். அதை வெற்றிகரமாக்கும் நாளில் கணேசனுக்குக் காத்திருக்கிறது புதிய வியாபாரக் கதவு.

வசதி இல்லாத ஓவியனுக்குக் காகிதமாக விரிந்து கிடந்ததாம், சாலை. அதுபோல, கிடைத்த வசதியைக் கொண்டு, தன்னைத் தலைவனாக முன்னிறுத்தி சிதம்பரத்திலும், சென்னையிலும் இரண்டு அலுவலகங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் கணேசன்.

புதிது புதிதாக எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பதுடன், அதனை உடனடியாக செயல்பாட்டுக்கும் கொண்டு வரத் துடிக்கிறார். வீட்டிலோ, அலுவலகத்திலோ தேவையற்ற மின் செலவைக் குறைக்கும் வகையில் புதிய மென்பொருள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இவரது நிறுவனம். எங்கோ வெளியில் இருக்கும்போதும், இந்த மொபைல் ஆப்பைப் பயன்படுத்தி, வீட்டில் ஓடும் டி.வி அல்லது ஃபேனை ஆஃப் செய்ய முடியும் என்பது சிறிய உதாரணம். பாதுகாப்பு சார்ந்தும் இதனைப் பயன்படுத்த முடியும் என்பது வசதி.

‘‘இதேபோன்று, ஊழியர் அடையாள அட்டைகளிலும் க்யூ ஆர் கோட்(QR Code) முறையை வடிவமைத்துத் தரும் புதுமையான பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். விசிட்டிங் கார்ட்களிலும் அதை அறிமுகம் செய்துள்ளோம். ஒரு விசிட்டிங் கார்டை ஸ்கேன் செய்வதன் மூலம், குறிப்பிட்ட நபர் குறித்த தகவல்களை சில விநாடிகளில் நாம் நமது போனிலோ, கணினியிலோ பதிவு செய்து கொள்ள முடியும்.

ஒரு புரட்சி முயற்சியாக பஸ் பயணத்தின்போது, வைஃபை வசதியை அளிக்க முடியுமா என்ற சோதனை ஓட்டம் ஒன்றை சிதம்பரம் டூ சென்னை செல்லும் ரதி மீனா ஆம்னி பேருந்தில் ஒரு மாத காலம் தொடர்ந்து செய்து பார்த்தோம். அது வெற்றிகரமாக அமைந்தது. இதை அடுத்த கட்டமாகத் தமிழகம் முழுக்க அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறோம்.

ஆனால், இணையதளக் கட்டணச் செலவுகள் அதிகமானதால், அதனை உடனடியாக செயல்படுத்த முடியாத நிலை இருக்கிறது. நெட் ஒர்க் நிறுவனங்கள் ஒத்துழைத்தால், அந்தப் புதிய மென்பொருளைக் குறைந்த விலைக்குக் கொடுக்கும் வாய்ப்போடு பேரும், பணமும் கிடைத்துவிடும். மக்களுக்கும், பஸ் பயணம் இனிமையாகி விடும்…’’ என்கிறார் கணேசன்.

சென்னை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் வைஃபை வசதியை அளிக்க மத்திய அரசு அண்மையில்தான் முயற்சி எடுத்துள்ளது. ரயில்களில் வைஃபை என்பதே கனவாக இருக்கும்போது, பஸ்களில் அதனைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ள 30 வயதில் ‘சிங்கிள்’ சிங்கம் கணேசனின் பணி வரவேற்கத்தக்கது.

‘‘தொழில் தொடங்கும்போது ஏற்ற இறக்கம் சகஜம். எனவே, எந்த ஒரு சவாலையும் சமாளிக்கும் ஆற்றல் தெரிந்தவர்களால்தான் இதனை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். தொழில் பற்றிய அறிவை அனுபவமாகப் பெற்றபின், அதன்பின்னர் இறங்குவதே சிறந்தது. தொழிலில் என்ன வெற்றி வாய்ப்பு என்பது தெரிந்து அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும். போட்டி நிறைந்த தொழிலில் முதலீடு செய்யும்போது, சந்தைப் பங்களிப்பைத் தெரிந்து கொள்வது நல்லது. போட்டி இல்லாத தொழில் என்பது தெளிவாகத் தெரிந்தால், எத்தனை கோடி ரூபாயை வேண்டுமானாலும் தைரியமாக முதலீடு செய்யலாம்…’’ என்று புதிய தொழில்முனைவோருக்கான ஆலோசனை சொல்கிறார்.

‘‘நடிகர் சூர்யா, ஏழைக் குழந்தைகளின் கல்வி உதவிக்காக நடத்திட்டு வர்ற, ‘அகரம் பவுண்டேஷனு’க்கு நிர்வாக வசதிக்கான மென்பொருள் ஒன்றைத் தயார் செய்து தந்தோம். அதன் தொடர்ச்சியா, அந்த அறக்கட்டளை மாணவர்களுக்கு ஐ.டி. துறையில் பணியாற்ற உதவும் வகையில் மென்பொருள் பயிற்சி கொடுக்கிறோம்…’’ என்று கண்கள் மின்னச் சொல்கிறார் கணேசன்.

கண் பார்வை இல்லாமல் போனால் என்ன… நம்பிக்கை இருக்கிறது என்று சாதித்துக் காட்டிய கணேசனை, ‘நம்பிக்கை’ நேசன் என்றும் அழைக்கலாம்.

பேட்டி, கட்டுரை : எஸ்.பி.அண்ணாமலை