Mr. M. Karrupiah

Father’s Name: Muthuraman

Family/House Name: Thenanchetty veedu

Hometown: Melaisivapuri

Kovil & Pirivu: Vairavan Kovil, Pillayar Vaguppu

Education: MIE Chartered Engineer

Spouse Name: Sornam

Birth Hometown: Pullankurichi

E-mail ID: pee.cbe@gmail.com

Website: www.indiamart.com/process-ekuipments/

Business: Engineering

Company name & Address: PROCESS EKUIPMENTS ENGINEERING, No. 11 Rajam Layout Kovaipudur, Coimbatore – 641042

No. of Employees: 10 employees

‘கண்டுபிடிப்பாளர்’ கருப்பையா

பேரீச்சம்பழத்தில் கொட்டை எடுப்பதை விட தேங்காயின் மட்டையை உரிப்பது மகா சிக்கலான வேலை. இதற்கான தீர்வாக இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர், கருப்பையா. இயந்திரத் தளவாடங்களோடு வாழ்ந்து புதிய இயந்திரங்களை உருவாக்கியவர்.

நம்மவர்களில் விவசாய விஞ்ஞானிகள் யாருமில்லை என்ற குறையைப் போக்கிய சொற்ப நபர்களில் கருப்பையாவும் ஒருவர். கண்டுபிடிப்பாளருக்கான கர்வமோ, உருவத் தோற்றமோ இன்றி எளிமையாக இருக்கிறார். சென்ற ஆகஸ்ட் மாதம் மணிவிழா கண்ட கருப்பையா, குன்னூர், ஹைதராபாத் போன்ற இடங்களில் படித்து வளர்ந்தவர். பிரவாகமாகக் கொட்டுகிற இவரது பேச்சு, சிறுவாணி ருசியைப்போல் சிலிர்ப்பூட்டுகிறது.

‘‘அப்பா மில் ஊழியராக இருந்தார். புதுக்கோட்டை, குன்னூர் போன்ற இடங்களில் அவர் பணியாற்றியதால், சிறு வயது முதலே பல்வேறு சூழல்களில் வளர்ந்தேன். திரு.அரங்கநாயகம், கல்வி மந்திரியா இருக்கும்போது, நான் என்னோட Mechnical டிப்ளமோவை முடிச்சேன். மாநிலத்திலேயே நான் மூணாவது மாணவன். அப்போ கார்போரண்டம் கம்பெனியிலே வேலை கிடைச்சு, பாலக்காட்டிலே ரெண்டு வருஷம் வேலை செய்தேன். அடுத்து, யூனியன் கார்பைட்ல (போபால் விஷவாயு நிறுவனம்) நல்ல சம்பளத்திலே ஹைதராபாத்ல வேலை கிடைச்சது. ஆட்கள் எடுத்தபோது, ஆயிரம் பேரிலே ரெண்டு பேருக்குத்தான் வேலை கொடுத்தாங்க. அதில் நானும் ஒருத்தன். பேட்டரி யூனிட்ல பராமரிப்புப் பொறியாளரா எனக்கு வேலை கிடைச்சது. அந்த வேலையிலே 5 வருஷம் இருந்தேன்.

அப்போ ஏ.எம்.ஐ.இ படிப்பை பகுதி நேரமா பண்ணி, மாநில அளவிலே ரெண்டாவது மாணவரா தேர்வானேன். இதைத் தொடர்ந்து, கோயமுத்தூர்ல உள்ள ‘வீல் ஆபரேட்டர்’ங்கிற (Wheel operator) அமெரிக்க நிறுவனக் கிளையிலே பணியாற்ற வாய்ப்பு வந்தது. கிளை நிர்வாகியா இருந்து விற்பனை, சர்வீஸ் மேற்பார்வை பார்த்துட்டிருந்தேன். டி.வி.எஸ்., சிம்ஸன், அசோக் லேலண்ட் நிறுவனங்களுக்கு சர்வீஸ் பார்க்கப் போய் வந்ததில், நல்ல அனுபவம் கிடைச்சது.

ஷாட் பிளாஸ்டிங் மெஷினைக் கையாள்றதுதான் நான் பார்த்த வேலை. எந்த ஒரு இன்ஜினியரிங் பாகமா இருந்தாலும் அதோட தயாரிப்பு முடிச்சதும் துரு, வெல்டிங் மார்க் எல்லாம் மறையவும், வெளிப்பார்வைக்கு ஷைனிங் தெரியவும், ஷாட் பிளாஸ்டிங் மெஷின் வெச்சு, ஒரு மேற்பரப்பில் சுத்தம் செய்வாங்க. புரியற மாதிரி உதாரணம்ன்னா, நாம பயன்படுத்தற கேஸ் சிலிண்டர்களை மண்ணிலே உருட்டியும், வண்டியில் கும்பலா ஏத்திட்டும் போறாங்க இல்லையா… ஆனா, அதோட சிவப்புப் பெயின்ட் உரியாம இருக்கிறதுக்குக் காரணம், அது ஷாட் பிளாஸ்ட்டிங் செய்யப்பட்டிருப்பதுதான். கார், லாரிகள், விமான பாகங்கள், ரெயில் பெட்டிகள், காற்றாலை இயந்திரங்கள் இவையெல்லாம் இதே மாதிரியான டெக்னாலஜி மூலம் மேற்பரப்பு சுத்தம் செய்யப்பட்ட பிறகு பெயின்ட் அடிக்கப்படுது. இதனாலதான், வெயிலிலும், மழையிலும் இருந்தாலும், ரொம்ப நாளைக்கு பெயின்ட் அழியாம, துரு ஏறாம, உறுதித் தன்மை குறையாம இருக்கு.

பெங்களூர், கொல்கத்தா, டெல்லி என்று பல ஊர்களுக்கும் பறந்து பறந்து சென்று சேவை செய்திருக்கிறேன். இதனால்அப்போது ஒரு டெக்னிகல் நபராக இருந்த நான், நிர்வாக விஷயங்களையும் கற்றுக் கொள்ள முடிந்தது. அந்த காலகட்டத்திலேதான், எதுக்கு இன்னொருத்தருக்குக் கீழே நாம வேலை செய்யணும்..? இந்தத் தொழிலை நாமே ஒரு டீம் அமைச்சுப் பண்ணலாமே!’ன்னு தோணுச்சு. 1984 ஆம் ஆண்டிலே தனியா தொழில் தொடங்கற ஐடியாவுக்கு வந்தேன்…’’ என்று மனமாற்றத்துக்கான அடிப்படை விதை விழுந்ததைச் சொன்னார் கருப்பையா. அப்போதே மாதம் ரூ.3000 சம்பளம், படிகள், உயர் பதவி என்ற அனைத்தையும் தாண்டி தொழில் செய்யத் தயாராகி இருக்கிறார்.

‘ஷாட் பிளாஸ்டிங், அதைப் போல பலமடங்கு பவர் கொண்ட சாண்ட் பிளாஸ்டிங்ன்னு ரெண்டு வகை மெஷின்களை சர்வீஸ் பண்ணிக் கொடுப்பது, உதிரி பாகங்கள் உடைஞ்சு போனா அதைத் தயார் பண்ணிக் கொடுக்கிறதுன்னு இருந்தேன். ஒரு ரெண்டு வருஷத்திலே நானே அதைத் தயார் பண்ண ஆரம்பிச்சேன்.

ஒரு புதிய இயந்திரத்தை உருவாக்கறது சாதாரண விஷயமில்லை. நிறைய ஆர்வம், ராத்திரி பகல் பாராத உழைப்பு, தொடர் சோதனை, முயற்சிகளில் சோர்வடையாத தன்மை… எல்லாம் தேவைப்பட்டது. இளம் ரத்தமா இருந்ததால, ரொம்ப ஆர்வமா அப்ப பண்ணினேன். 10, 12 இன்ஜினியர்களை வெச்சு இந்த மெஷின்களை உருவாக்கி விற்க ஆரம்பிச்சேன். விற்பனைக்குப் பின் சேவையா, ஒவ்வொரு மெஷினுக்கும் ஒரு இன்ஜினியரை இன்சார்ஜா போட்டு, தொடர்ந்து கண்காணிக்கச் சொல்வேன்.

வெளிநாட்டு இயந்திரங்கள் பலவற்றையும் இந்தியாவிலேயே தயாரித்திருக்கிறேன்.1989-ல் நாலு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசுத் துறை கான்ட்ராக்ட் ஒன்றை எடுத்தேன். நான் நகரத்தார் என்ற அடிப்படையில், என் மீது நம்பிக்கை வைத்து பலரும் கடனுக்கு உதிரி பாகங்களைக் கொடுத்தனர். வேலையை முடித்து, அரசுத் துறையில் பணம் வாங்குவதில் எனக்குப் பெரிய சிரமம் இருந்தது. ஏழெட்டு மாதங்கள் ஆன நிலையில், எனக்கு கடனுக்குப் பொருள் அளித்தவர்களுக்கு, தாமதத்துக்கான காரணம் சொல்லித் தொடர்ந்து கடிதம் எழுதி அவகாசம் கேட்டேன். அரசுத் துறையிலிருந்து பணம் கைக்கு வந்தவுடன், ஒவ்வொருவரையும் நானே நேரில் சென்று சந்தித்து, மன்னிப்பு கேட்டு பணம் தந்தேன். பொருட்கள் வழங்கிய பல்வேறு நிறுவனங்களுக்கு / நிறுவன உரிமையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அன்று தொடங்கி இன்றுவரை அவர்கள் எனக்குத் தொடர்ந்து பொருட்கள் சப்ளை அளித்து வருகிறார்கள். இந்த நம்பிக்கையைப் பெறுவதே நம்மவர்களின் வியாபார வளர்ச்சிக்கான அடிப்படை என்பது என் கருத்து’’ என்று தொழில் வளர்ச்சி பற்றிச் சொன்ன கருப்பையா, அதற்காக ஃபேக்டரி அமைக்க முதலீடு திரட்டிய விதம் சுவாரஸ்யமானது.

ஒரு அத்துவானக் காடு, நகரத்தின் அவுட்டர் ஏரியாவாக மாறுவதன் முதல் அடையாளம் அங்கே ஒரு ஃபேக்டரி முளைப்பதுதான். கருப்பையா, அவுட்டர் ஏரியாவுக்கான அச்சாரத்தைப் போட்டுள்ளார்.

‘‘நான் சம்பாதிச்ச காசு, பி.எஃப் பணம், சீதனப் பணத்தை வெச்சு 3 ஏக்கர் (300 சென்ட்ஸ்) விவசாய நிலம் வாங்க முடிவு செய்தேன். என் சொந்தக்காரங்க மத்தியிலே பலத்த எதிர்ப்பு. ஆள் இல்லாத இடத்திலே இடத்தை ஏன் வாங்கணும்… நகருக்குள் வாங்கலாமேன்னாங்க. நான் என்ன ஜாலியா வீடு கட்டி குடியேறவா இடம் வாங்கறேன். இது ஃபேக்டரிக்கு!’ன்னு சொல்லிட்டேன். யார் சொல்றதையும் நான் கேட்கலை. ஏன்னா, என் பிஸினஸை எங்கே வைக்கணும்ங்கிறதுல நான் தெளிவா இருந்தேன். கொஞ்ச நாளிலே அந்த இடம் விலை ஏறியது. எனக்கென்று 80 சென்ட் நிலத்தை வைத்துக் கொண்டு மீதத்தை விற்றதில், லாபமும் கிடைத்தது. பைசா செலவின்றி, தொழிற்சாலைக்கான இடமும் கிடைத்தது’’ என்று உற்சாகமாகச் சிரிக்கிறார் கருப்பையா.

இடத்துக்கு மட்டுமில்லை… தொழிலையும் ‘தன் வழி’யிலேயே நடத்த புது ரூட் பிடித்திருக்கிறார் இவர்.

‘‘என்னுடைய ஃபேக்டரியில் பெரிய பெரிய இயந்திரங்களை வாங்கி இறக்கவில்லை. அடிப்படைத் தேவைக்கான இயந்திரங்களை மட்டுமே வாங்கி வைத்திருந்தேன். எனக்கு உதவியாளராக மெஷின் தயாரிப்பு படங்களை வரைய இன்ஜினியரை வைத்திருப்பேன். என் ஆலோசனைப்படி அவர் வரையும் படத்தை இயந்திரம் தயாரிக்கும் நபருக்கு அனுப்பி, மெஷின் தயாரிக்க வைப்பேன். அதனை அங்கேயே சோதித்து, வாடிக்கையாளருக்கு அனுப்பி வைத்துவிடுவேன். இதனால், பல லட்சம் ரூபாய் முதலீடு போட்டு இயந்திரத் தயாரிப்பு ஆலையை நான் நடத்த வேண்டிய அவசியமோ அந்த அலுவலகத்துக்கு பல ஊழியர்களைப் போட்டு பராமரிக்க வேண்டிய தேவையோ எழவில்லை. அந்தக் காலத்திலேயே (1985) அவுட் சோர்ஸிங் முறையில் அலுவலகம் நடத்தினேன். செலவுகள் குறைந்ததால், எனக்கு லாபம் அதிகரித்தது. சேவைத் தொழிலில் இதுவும் ஒருவகை வியாபார யுக்திதான்!

நிர்வாகப் பொறுப்புக்கு நேரம் செலவழிப்பதைவிட, டெக்னிகல் துறை சார்ந்த கண்டுபிடிப்பாளராக நான் அதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பினேன். இதனால், தொழிற்சாலைகளை விரிவாக்குவதைவிட, என் மூலம் பல நிறுவனங்களுக்கு புதிய இயந்திரங்கள் கிடைக்க வேண்டும் என விரும்பினேன். என்னிடம் உதவியாளராக இருந்த பலர், தொழில் கற்றுக் கொண்டு, தாங்களே சொந்தமாக செய்வதாகக் கூறியபோது, என் ஊழியர்களையும் வாழ்த்தி அனுப்பி வைத்ததோடு, அவர்களுக்கும் ஆர்டரும் தந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் பல தொழில் அதிபர்கள் என் மூலமாக உருவாகி உள்ளனர். இப்போது, என்னைப் போன்ற இயந்திரத் தயாரிப்பாளர்கள் 20 பேர் மட்டுமே இந்தியாவில் இருக்கிறார்கள். மிகவும் சிக்கலான பிரச்னை என்றால், என்னைக் குறிப்பிட்டுக் கூப்பிடும் அளவுக்கு இத்துறையில் நான் பெயர் எடுத்திருக்கிறேன்’’ என்கிறார் கருப்பையா.

சவால் நிறைந்த வேலை இது. வெறும் மூளை பலம் மட்டுமின்றி, சுற்றுப் புறத்தை சமாளிக்கும் ஆற்றலும் தேவைப்பட்டிருக்கிறது. கருப்பையாவும் அப்படி சில சவால்களை எதிர்கொண்டுள்ளார்.

‘‘நேரத்தையும், தூரத்தையும் குறைப்பதே விஞ்ஞானிகளின் வேலை! எனக்குக் கொஞ்சம் கூடுதலாக, ஊழியர்களின் தேவையைக் குறைக்கும் பணியும் சேர்ந்து கொண்டது. இயந்திரமயமாக்கல் என்பது தொழிற்சங்கங்களுக்கு கசப்பான வார்த்தை. தங்கள் எதிர்காலத்தை அழிக்க வந்தது போலவே என்னைப் பார்ப்பார்கள். இதனால் பல மிரட்டல்களும் எனக்கு வந்தன.

கேரளாவில் அரசுத் துறை சார்ந்த நிறுவனத்தில் உற்பத்தியை அதிகரிக்க விரும்பி, கோவைக்கு என்னைத் தேடி வந்தார்கள். பல திட்டங்களைச் சொன்ன நான், அசட்டையான ஊழியர்களை முழுமையாகப் பணி செய்ய வைக்கும் வகையில் இயந்திரங்களை வடிவமைத்து தந்து பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தேன். இதனால், என் மேல் கடும் கோபத்தில் இருந்த நிறுவன ஊழியர்கள், ‘உன் வேலையைத் தமிழ்நாட்டுக்குள்ளே வெச்சுக்கோ!’ என்று மிரட்டினார்கள். எனக்கு சரளமாக மலையாளமும் பேச வரும் என்பதால், ‘என் வேலையை நான் செய்கிறேன். உன் வேலையை நீ செய்!’ என்று தைரியமாக அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுத்தேன்..

ஆறே மாதத்தில் அவர்களின் நிறுவன உற்பத்தி ஐந்து மடங்கு அதிகரிக்கும்படி செய்து விட்டதால், என் மேல் மரியாதை வைத்திருந்த நிர்வாகம் எனக்கு முழு பாதுகாப்பும் கொடுத்தது. நான் எர்ணாகுளம் எல்லையில் கால் வைத்த உடனே, எனக்கு சைரன் வைத்த கார் வந்துவிடும். நான்கு காவலர் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நான் அந்தப் பணியை முடிக்கும் வரை முழு செக்யூரிட்டி அளித்தார்கள்…’’ என்கிற கருப்பையா ஒன்பது மொழி பேசும் வித்தகர்.

‘‘குன்னூர்ல இருந்தப்ப படுகர் மொழி. பாலக்காட்டிலே இருந்தப்ப மலையாளம் படிச்சுக்கிட்டேன். பெங்களூர்ல இருந்தப்ப கன்னடம் கத்துக்கிட்டேன். ஹைதரபாத்ல படிச்சதால தெலுங்கு தெரியும். மொழிகளைப் பொறுத்தவரை, ஹிந்தி தெரிஞ்சா, மராத்தி, குஜராத்தி, உருது எல்லாம் பேசிட முடியும். தெலுங்கு தெரிஞ்சா கன்னடமும், தமிழ் தெரிஞ்சா மலையாளமும் பேசறது ஈஸி. இப்படி எனக்கு 9 மொழி தெரியும். அது என் தொழிலுக்குப் பெரிய பலமா இருந்தது…’’ என்கிறார்.

அண்மையில் இவரது கண்டுபிடிப்பு ஒன்று,விவசாயத் துறையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. தேங்காய் உரிக்கும் இயந்திரக் கண்டுபிடிப்புதான் அது. கடப்பாறையை தலைகீழாக நட்டு, மனித உழைப்பில் மட்டுமே காலம் காலமாகத் தேங்காய் உரித்து வந்த நிலையில், இவரது மெஷினுக்கு செம வரவேற்பு.

‘‘பெரியவர் பொள்ளாச்சி மகாலிங்கத்தோட கஸின் பிரதர் ஆர்.வி.எஸ் மாரிமுத்துன்னு பேரு… அவர் ஷாட் பிளாஸ்டிங் மெஷின் கேட்டு வந்தபோது, தேங்கா உரிக்கிறதுக்கு ஆள் கிடைப்பது சிரமமா இருக்குன்னு பேசிட்டிருந்தார். இதேபோல பிரச்னை சொல்லி எனக்கு தேங்கா உரிக்கிற மெஷின் தயார் பண்ணுங்கன்னு சபாபதிக் கவுண்டர்ன்னு வேட்டைக்காரன் புதூர்ல இருக்கிற நண்பரும் தொடர்ந்து கேட்டுட்டிருந்தார். பலருக்கும் இதுக்கான தேவை இருக்கிறது தெரிஞ்சு, அதிலே இறங்கினேன். நான் இந்த ஆராய்ச்சியிலே இருக்கிறபோது, பொள்ளாச்சியிலே இருந்து எனக்கும் என் மனைவிக்கும் சபாபதி சாப்பாடு எடுத்துட்டு வருவார். ஆரம்ப கட்டத்திலே, கூடவே இருந்து ஆர்வமா எனக்கு சப்போர்ட் பண்ணினார்.

ஆறு மாசம் ஒர்க் பண்ணினபிறகு, மாதிரி மெஷினை ‘ஒருமாதிரி’ தயார் பண்ணியாச்சு. இந்தப் பக்கம் காயை உள்ளே விட்டா, ‘அஜக்…பஜக்… சஜக்‘னு மூணே உரியிலே, தேங்காய் உரிச்ச கோழி மாதிரி சின்னக் குடுமியோட வெளியே வந்துவிழும்.

கோயமுத்தூர்ல நடைபெற்ற சிறுதொழில் கண்காட்சியிலே இதைப் பார்வைக்கு வெச்சேன். தமிழகத்திலே தேங்காய் வாரியம், டெல்லி விவசாயத் துறை அமைச்சகத்தில் இருந்தெல்லாம் என்னைத் தேடி வந்தாங்க. புதிய கண்டுபிடிப்பைப் பத்தி விளக்கமா கேட்டுக்கிட்டாங்க. சுமார் ஒரு லட்சம் ரூபாய் விலையுள்ள அந்த மெஷினை, எண்ணெய் எடுக்கிற சில தனியார் நிறுவனங்களும், கோயமுத்தூர் விவசாயப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட அரசுத் துறை நிறுவனங்களும் வாங்கிப் பயன்படுத்திட்டிருக்காங்க. வெளிநாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யற மாதிரி ஏற்றுமதியும் செய்திருக்கோம்.

‘கோகனட் டி ஹஸ்கர்’ என்று பெயரிடப்பட்ட இந்த இயந்திரங்களை நோகாம சிலர் நகலெடுக்கிற விவரம் தெரிய வந்தது. இதுக்கான பேட்டண்ட் வாங்கறதிலே சில சிக்கல்கள் இருந்தது. இதனால, வியாபாரம் செய்ய தனி நபர் ஒருவரை நியமிச்சிருக்கேன். எங்காவது, இதை நகலெடுத்து யாராவது புது இயந்திரம் செய்தா அவர் போய் தட்டிக் கேட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்…’’ என்று கண்டுபிடிப்பு குறித்துச் சொன்னார் கருப்பையா. யாரையும் தேடிச் சென்று அவர்கள் பின்னால் அலைந்து உதவி பெறுவதில் எல்லாம் ஆர்வம் காட்டாத கருப்பையா, தேடி வருவோருக்கு மட்டும் இயந்திரங்களை விற்று வருகிறார்.

‘‘அத்தை மகளை இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டனர். என்னுடைய மூத்த மகனைத் தொழிலில் கொண்டு வர வேண்டும் என்ற ஆவலுடன் டிப்ளமோ படிக்க வைத்தேன். 15 வருடங்கள் முன்பு துபாய் சென்ற அவர், அங்கேயே சிறப்பாக செட்டில் ஆகிவிட்டார். மகள் அமெரிக்காவில் இருக்கின்றார். இரண்டாவது மகனை வெளிநாடு அனுப்ப வேண்டாம் என்று முடிவெடுத்து, பெங்களூரில் பணியாற்ற வைத்திருக்கிறேன்…’’ என்று தன் குடும்பம் பற்றிச் சொன்ன கருப்பையா, தன் வியாபார அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘இன்றைய இளம் தலைமுறை, ‘இந்த டிகிரி படிச்சவன் நான். இதுதான் செய்வேன்… இப்படித்தான் செய்வேன்’ என்று இருக்கக் கூடாது. தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நிராகரிக்காம ஆர்வத்தோடு எதிர்கொள்ள வேண்டும். தொழில் செய்ய வேண்டும் என்று ஆர்வம் காட்டுவோர் முதலில் ‘பொட்டியடிப் பையனா’க எந்தக் கூச்சமும் இன்றி தொழில் கற்க வேண்டும். கம்ப்யூட்டரில்தான் வேலை செய்வேன் என்று அடம் செய்யாமல், காரின் கதவைத் திறந்து விடவும் தயாராக இருக்கவேண்டும். ஒயிட் காலர் ஜாப்தான் செய்வேன் என்று அடம் செய்தால், கடைசிவரை வேலை பார்த்துக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

தொழில் என்று வரும்போது முதலீடு இல்லாமல் தொழில் செய்வதே சிறந்தது. வட்டிக்குப் பணம் வாங்கி சிரமப்படுவது, வங்கிகள் பின்னால் அலைவது… இதெல்லாம் தேவையற்றது என்பது என் கருத்து’’ என்றார் கருப்பையா.

நம்மால் முடியாது என நினைப்பது, தானே தனக்கு இழைக்கும் தன்னம்பிக்கை துரோகம் என்பதை தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு ஜெயித்திருக்கிறார் கருப்பையா.

பேட்டி, கட்டுரை : எஸ்.பி.அண்ணாமலை