Unnamalai Muthu

Father’s Name:T. Thenappan

Family/House Name:S.M.K.RM. House

Hometown: Pallathur

Kovil & Pirivu:Vairavan Kovil (Thaiyanar pirivu)

Spouse Name:RM. MUTHU

Spouse Birthtown: Arimalam

E-mail ID: unna@asterapparels.com

Website: www.asterapparels.com

Business: Apparel Branding & Retail

Company name & Address: Aster Apparels, 56 Raja Annamalai Road, Saibaba Colony, Coimbatore-641 011

No. of Employees: 150 employees

ஆயத்த ஆடை தயாரிப்பு

அசத்தும் கோவை உண்ணா!

வாய்ப்புக்கள் என்பவை வரம். அது தாமாக கிடைப்பதில்லை… போராடித்தான் பெற வேண்டும். அதுவும் உண்ணா மாதிரி பெண் தொழிலதிபர்கள் இரட்டை வரம் பெற்றவர்கள்.

உண்ணாமலை முத்து, சிறு வயது முதலே வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டவர். இன்று தனது கனவையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

ரூ.7,000 கோடி வர்த்தக வாய்ப்பு கொண்டது குழந்தைகளுக்கான ஆயத்த உடைகள் உலகம். இதில் பிராண்டட் உடைகள் என்பது வெறும் 7 %க்கும் குறைவுதான். மீத உடைகள் அனைத்தும் அங்கீகாரமற்ற, ஒழுங்கு செய்யப்படாத துறையாகவே இருக்கிறது. பிராண்டட் பகுதியைக் குறிவைத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் உண்ணா. கோவை சாய்பாபா காலனியில் உள்ளது இவர்களின் ஆஸ்டெர் அப்பேரல்ஸ் கார்மென்ட் இண்டஸ்ட்ரியின் தலைமை அலுவலகம்.

ஆன்ட், ஜிக்ஸா, ஜூனோ என்ற குழந்தை உடைகளைத் தயாரிக்கிறார். குழந்தைகள் கேட்டால் எதுவும் கிடைக்கும் என்பதாலேயே அவர்களுக்கான உணவோ, உடையோ தயாரிக்கும் வர்த்தகம் எவர்க்ரீனாக, எல்லா காலத்துக்குமானதாக இருக்கிறது. ஆனால், அதைத் தயாரித்தளிப்பது, தண்ணீரில் தத்தளிப்பது மாதிரி. தம் விட்டால் கதம்.

‘‘சேலை, சுடிதார், ஆண்களுக்கான சட்டை டிசைன் மற்றும் ஸ்டைல்களை குறிப்பிட்ட இடைவெளியில் மறுமுறை பயன்படுத்தலாம். ஆனால், குழந்தைகளுக்கான ஆடை ஸ்டைல்கள் அப்படியானதல்ல… ஒருமுறை பயன்படுத்திய உடை வடிவங்களை மறுமுறை பயன்படுத்த முடியாது. காரணம், குழந்தைகளைத் திருப்திப்படுத்த புதிய புதிய வடிவங்களை முயற்சிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். எனவேதான், எங்கள் உடை தயாரிப்பு அணியைவிட, ஆராய்ச்சி அணியின் வேலை பவர்ஃபுல்லாக இருக்கிறது.

புதிய மாடல், புதிய வண்ணம், புதிய வடிவமைப்பு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எறும்பு மாதிரி அதற்காக ஓயாமல் உழைத்துக் கொண்டே இருப்பதால்தான், எங்கள் முதல் பிராண்ட்டின் பெயர் ஆன்ட்…’’ என்று ரசித்துச் சிரிக்கிறார் உண்ணா.

இவர் இத்துறைக்கு எப்படி வந்தார்..? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றியவர் இவரது அப்பா தேனப்பன். அடிக்கடி ஊர் மாறும் வேலை என்பதால், சிறு வயதில் ஆயா வீட்டில் வளர்ந்தவர். வர்த்தகப் பின்னணி கொண்ட அய்யா, குடும்பத்தைக் கட்டிக் காத்த ஆயா என வியப்போடு பார்த்தே வளர்ந்ததால், இவருக்குள் சிறுவயது முதலே வியாபாரத்தின் மீதான ஈர்ப்பு இயல்பாகவே இருந்தது. இது, முதல் வரம்.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிகல்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் படிப்பை முடித்த உண்ணா, ஜாம்ஷெட்பூரில் மேற்படிப்பை முடித்துள்ளார். இது, புதிய நபர்களையும் அணுகி வியாபாரம் செய்ய பின்னாளில் உதவியாக இருந்துள்ளது.

18 ஆண்டுகளுக்கு முன் வரன் வாயில் தேடி வந்தது. ஒரு பெண்ணின் வாழ்வில் திருமணம் என்பது சுனாமியாகவும் இருக்கலாம்… சுகமான அலையாகவும் இருக்கலாம். உண்ணாவுக்கு வாய்த்தது வரன், அவர் எதிர்பார்த்த மாதிரியே சுதந்திரமானதாக அமைந்தது. அது இரண்டாம் வரம்.

உண்ணாவின் துறுதுறுப்பும், வியாபார ஆர்வமும் அறிந்த கணவரும், மாமனாரும் தங்கள் குடும்ப வியாபாரமான ரெடிமேட் ஆடை தயாரிப்பில் அனுமதித்தனர்… தொழிலைக் கற்றுத் தேர உற்சாகம் அளித்துள்ளனர். மேல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே முக்கிய தொழிலாக இருந்த காலகட்டத்தில், உள்ளூர் தயாரிப்புகளோடு போட்டி போடலாம் என்ற உண்ணாவின் எண்ணத்துக்கு பச்சைக் கொடி காட்டி உள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே, உருவானது குழந்தைகள் ஆடைகளை பிராண்ட் பெயரில் தயாரிக்கும் புதிய தொழில்.

ஒரு தயாரிப்பை பிராண்டாக பிரபலப்படுத்துவது சாதாரண விஷயமல்ல… மிகுந்த போராட்டமும், தொடர் உழைப்பும் தேவைப்படும் ஏரியா. முதலில் இந்தியா முழுக்கக் கொண்டு சேர்க்கும் ஆர்வத்துடன், 500-க்கும் மேற்பட்ட மல்டிபிராண்ட் ரீடெய்ல் அவுட்லெட்களில் ஆயத்த ஆடைகளைக் கொண்டு சேர்த்து விட்டாலும், அதற்கான தொகையைப் பெறுவது பிரம்மப் பிரயத்தனமாக இருந்துள்ளதாக கூறுகிறார் உண்ணா.

இந்தப் பின்னடைவுகளைத் தாண்டி, வர்த்தகத் தலைநகரான மும்பையில் 2006 ஆம் ஆண்டு, இந்திய அளவில் நடைபெற்ற ஆடைக் கண்காட்சியில் தனது தயாரிப்புகளையும் காட்சிப்படுத்தினார் உண்ணா. அதுதான் அவரது வியாபராத்தில் மைல் கல்.

‘‘கண்காட்சியில் எங்கள் பிராண்டுக்கு நல்ல வரவேற்பு. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சப்ளை ஆர்டர்கள் வந்தன.

இங்கே என் கணவர் ஆர்.எம். முத்து பற்றி சொல்லியே ஆக வேண்டும். திருமணமான புதிதில் பேச்சுவாக்கில் ஒரு விஷயம் சொன்னார். ‘நான் உன் வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். நானே உன் வாழ்க்கை அல்ல!’ என்றார். என் வாழ்க்கையில் திருப்புமுனை வாக்கியம் அது.

அவர் ரிஸ்க் எடுத்து வியாபாரம் செய்யும் அதீத தைரியம் கொண்டவர். அவருடன் அலுலவகம் சென்று வந்த காலத்தில் எந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பதை கண்கூடாகத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஒரு தொழிலில் சமயோசித புத்தியும், வேகமாக செயல்படும் மனோபாவமும் அதிகம் தேவை. அதேபோன்று, தரத்தில் எந்தவகை சமரசமும் செய்து கொள்ளமாட்டார். அவர் எதிர்பார்க்கும் ரிசல்ட் வந்தால் மட்டுமே ஒப்புக் கொள்வார். அது ஒரு தொழில் முனைவருக்கான மிக அடிப்படை தத்துவம்.

என் கணவர், ‘இது உன் வியாபாரம். நீயே நேரடியாக களத்தில் இறங்கு..! சுயமாக முடிவெடு!!’ என்று சுதந்திரம் அளித்தார். ஒரு பெண்ணாக பல்வேறு மாநிலங்களுக்கும் பயணப்படும் தைரியத்தை உள்வாங்கிக் கொண்டேன்.

தூரம் என்பது தியரி… பயணம் என்பது பிராக்டிகல்! பிராண்ட் டெவலப்மெண்ட்டுக்காக வெறும் மெயில் மட்டுமே அனுப்பினால் வர்த்தகம் பெருகாது என்பதைப் புரிந்து கொண்டு, எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் வர்த்தகத்தை விரிவாக்கக் கிளம்பினேன்…’’ என்ற உண்ணா, தாம் சந்தித்த சில சவால்கள், சிக்கல்கள், அதன் தொடர்ச்சியான வளர்ச்சி பற்றியும் கூறினார்.

‘‘பீஹாரில்தான் எங்களது முதல் பிராண்டட் ஸ்டோர் அமைந்தது. அடுத்து, டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று பத்து இடங்களில் விரிவாக்கம் செய்தேன். மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் பெண்கள் தனித்து செயல்படுவதற்கு ஏற்ற சூழல் கொண்டதாக இல்லை. அதுபோன்ற பிரச்னைகளையும் எதிர்கொண்டது ஒரு சவால்தான்.

அவ்வளவு சிரமப்பட்டு கிழக்கிந்தியாவில் ஒரு பெரிய நெட் ஒர்க்கை உருவாக்கி, வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முயற்சிக்கும்போது, போட்டி நிறுவனம் ஒன்று எங்கள் ஊழியர்களை மொத்தமாக எடுத்துக் கொண்டு விட்டது. அவர்கள் மூலமாக செய்த தொழில்கள் அனைத்தும் என்னவாகுமோ..? என்ற அச்சம் எழுந்தது. ஒரு பலூனை ஊதி, ஊதிப் பெரிதாக்கி மகிழ்ச்சியோடு இருக்கும்போது, அது படாரென வெடித்தால் எப்படி இருக்கும்..?

ஆனால், தன்னம்பிக்கையோடு அதனை எதிர்கொண்டேன். ஒரிஸாவில் பணியாற்றிய டீமை அங்கே அனுப்பி, புதிய நெட் ஒர்க்கை ஓரிரு மாதங்களில் உருவாக்கினோம். அடுத்த சில நாட்களில் பிரச்னை தீர்ந்து பெரிய நிம்மதி வந்தது. இப்படியான சறுக்கல்களுக்கு இடையே வளர்ச்சிக்கும் திட்டமிட்டுக் கொண்டே வந்தேன்.

எனது முயற்சியின் தொடர்ச்சியாக, கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அவர்களது பொம்மைப் படங்களை எங்கள் ஆடைகளில் அச்சிட அனுமதி பெற்றுள்ளோம். இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

குழந்தைகள் உடை என்பது எப்போதுமே வர்த்தகம் கொண்டதாகும். தொழிலை சரியாகத் தேர்வு செய்வதும் அதில் புதுமைகள் புகுத்துவதுமே வெற்றிக்கான அடிப்படை. போட்டியை சமாளிப்பது என்பது இடையில் முளைக்கும் சவால். அதுதான் நம்மை எப்போதும் உயிர்ப்புடன் வைத்துக் கொண்டே இருக்கிறது.

பிரத்யேக ஷோரூம்களாக நாங்கள் வைத்திருப்பது ஒரு பக்கம்… மெகா மார்ட், பிராண்ட் ஃபாக்டரி போன்ற பெரிய நிறுவனங்களின் ஷோ ரூம்களிலும் இருப்பது மறுபக்கம்… என்று இன்று இந்தியா முழுவதும் எங்களது பிராண்ட்கள் கிடைக்கின்றன. குழந்தைகள் ஆடை தயாரிப்பில் வேல்யூ ப்ரைஸ் பிரிவில் நாங்கள்தான் முதன்மையாக இருக்கிறோம். இதேபோன்று, இந்தியாவின் முன்னணி குழந்தைகள் ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனப் பட்டியலில் டாப் 3-ல் எங்கள் நிறுவனமும் இருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம்…’’ என்கிறார் உண்ணா.

அடுத்த தலைமுறை தொழிலதிபர்கள் பற்றிய இவரது கருத்து..?

‘‘எந்தத் தொழிலைச் செய்தாலும், அதில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற தீவிரமான வெற்றி உணர்வும், தீர்க்க சிந்தனையும் அவசியம். இலக்கை நோக்கிய சிந்தனையும், அதை அடையும் வழிமுறைகளையும் திட்டமாக்கிக் கொள்ள வேண்டும். அத்தோடு தொழிலுக்கான அடிப்படை கணக்கான லாபத்தின் சதவிகிதம் குறைந்தவிடாதபடி கணக்கிட்டுக் கொள்ளும் தெளிவு இருக்க வேண்டும்.

தொழில் ஓரளவு வளர்ந்து விட்டால், போதுமான லாபம் வருகிறது… நாம் எண்ணிய நிலையை அடைந்து விட்டோம் என்று சுகமான வட்டத்தில் அமர்ந்துவிடக் கூடாது. ‘ஓடுகிற வயதில் உட்கார்ந்துவிட்டால், உட்காரும் வயதில் ஓடவேண்டி வரும்!’ என்பார்கள். இதன் தொடர்ச்சியாக அடுத்தது என்ன..? என்ற கேள்வியுடன் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். ரிஸ்க் எடுக்கத் தயங்கக் கூடாது. தொடர்ந்து உழைத்தால், தொடர்ந்து வளர முடியும்.

இதற்கெல்லாம் மேலாக நம் சமூகத்தின் மீது உலகளாவிய நன்மதிப்பும், நேர்மையாளர்கள் என்ற நற்பெயரும் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ‘பெயர் சொன்னால் போதும்… தரம் எளிதில் விளங்கும்!’ என்பது நம் சமூகத்துக்கு மிகவும் பொருந்தும். இந்தியா முழுக்க நாங்கள் பயணித்தபோது, இதனைக் கண்கூடாக பார்த்து உணர முடிந்தது. முன்னோர் விதைத்த நற்பெயரை நாம் அறுவடை செய்துகொள்ளும் சுகம் அது. இந்த சுலப வலையைப் பின்னிக் கொண்டு உலகின் எந்த மூலை முடுக்குக்கும் சென்று தொழில் செய்ய முடியும்… வளர முடியும்’’ என்ற உண்ணாவிடம் அவரது எதிர்காலத் திட்டம் பற்றிக் கேட்டோம்.

‘‘குழந்தைகள் ஆயத்த ஆடைகளில் இருந்து வளர்ந்து அனைத்து ரக ஆயத்த ஆடைகளையும் பிராண்ட் செய்ய வேண்டும் என்பதும், அவற்றை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்து, பெயர் பெறச் செய்ய வேண்டும்’’ என்ற தன் ஆசையைக் கூறினார். கோவையில் தொழில் செய்வதால், அங்குள்ள சமூக அக்கறை அமைப்பான சிறுதுளி உறுப்பினராக, நகரத்தைப் பசுமையாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். ஸ்பார்க், விழுதுகள் என்ற அமைப்புகளின் வழியாக கல்வி உதவிகளையும் சத்தமின்றி வழங்கி வருகிறார்.

கோவையில் உள்ள இவர்களது தலைமை அலுவலகத்தில் நிரந்தர ஊழியர்கள், மார்க்கெட்டிங் ஊழியர்கள் என 150 பேர் வரை பணியாற்றுகின்றனர். கணவரும், மாமனாரும், குடும்பத்தாரும் என அனைவரின் ஒத்துழைப்பால் இதனை சாதிக்க முடிந்ததாகக் கூறுகிறார் உண்ணாமலை முத்து.

ஆண்கள் அலுவலுக்கு வீட்டை விட்டுச் செல்கிறார்கள். பெண்களோ, எங்கு சென்றாலும் வீட்டைச் சுமந்தபடியே இருக்கின்றனர். பணிச் சுமைக்கு இடையிலும் தனது பிள்ளைகளான ஐஸ்வர்யா (12 ஆம் வகுப்பு), சித்தார்த் (8 ஆம் வகுப்பு) படிப்பிலும், அவர்கள் எதிர்காலத்திலும் அக்கறை எடுத்துக் கொள்வதில் எந்தக் குறையும் வைப்பதில்லை இவர்.

நன்கு படித்த ஒரு பெண், அக்குடும்பத்தின் தூண்! அந்தப் பெண் சிறந்த தொழிலதிபராக இருந்துவிட்டால், குறைந்தபட்சம் அடுத்த நான்கு தலைமுறைக்கு அந்தக் குடும்பம் தொழிலதிபர் குடும்பமாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உண்ணா நமது சமூகத்தில் அப்படி ஒரு வழிகாட்டி!