PL. Arunachalam

Father’s Name:S. Palaniappan

Family/House Name:Pethan Chettiyar Veedu

Hometown: KadiyapPati

Kovil & Pirivu:Ilayirankudi & Kalanivasal

Edn Qualification:BTECH IT, B.Sc,Jewelry Designing

Spouse Name:Rajalakshmi

Spouse Birthtown: Devakottai

E-mail ID: arun@acee.sg

Website: www.acenura.com

Business: Software Development & Jewellery Retail

Company name & Address: ACE NURA (S) PTE LTD , 03-02D, 110 Middle Road, Chiat Hong Building, Singapore 188968.

No. of Employees: 40 employees

Awards/Recognition/Membership: Creative Manager at Singapore Indian Chamber Of Commerce & Industry( since 2015)
Recognition of Singapore Indian Business Leaders Award 2016
Exco Member since 2010 at Little India Shopkeepers & Heritage Association.

பல் தொழில் முனையும் பழனியப்பன் அருணாச்சலம் ஒரே சமயத்தில் பலவகையான செயல்களைச் செய்பவர்களை அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம், படித்தும் இருக்கிறோம். சதாவதானி செய்குத்தம்பி பாவலர் ஓர் உதாரணம். ஒரே சமயத்தில் பல தொழில்களை செய்வது மட்டும் அல்ல, தொழில் சார்ந்த சமூகப் பணிகளிலும் செயல்களிலும் ஈடுபட்டு இருப்பவரை எப்படிச் சொல்வது? பழனியப்பன் அருணாச்சலம் என்று வேண்டுமானால் அழைக்கலாம். நாம் சுருக்கமாக அருண் என்று அழைப்போம்.

நமது இந்த வாரக் கட்டுரையின் நாயகர், சிங்கப்பூரில் வாழும், கடியாபட்டியைச் சேர்ந்த, இளையர் அருண், உழைப்பின் மேன்மைக்கும், தொழில் முனையும் ஆர்வத்திற்கும் ஓர் உதாரணம். சிங்கப்பூரிலும், சென்னையிலும் அலுவலகங்களைக் கொண்ட ACE NURA, என்ற மென்பொருள் நிறுவனம், ஆபரண வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, தங்கக் கட்டிகள் வர்த்தகம் (Bullion Trading), சுற்றுலா முகவர் என்று கால்களில் சக்கரம் கட்டி கொண்டு, இல்லை இல்லை இடுப்பில் இறக்கை கட்டிக்கொண்டு பறந்து கொண்டு இருப்பதற்கு இடையில், சிங்கப்பூர் இந்தியா வர்த்தகச் சங்கத்தில் (SICCI) படைப்பு மேலாளர் (Creative Manager) என்ற தொண்டுப் பணியிலும், லிட்டில் இந்தியாவின் பாரம்பரியக் கடைக்காரர்கள் சங்கத்தில் (LISHA) செயற்குழு உறுப்பினர் என்று பல தன்னார்வப் பணிகளிலும் ஈடுபட்டு உள்ளார்.

அருண் பள்ளிப் படிப்பைக் கொடைக்கானலில் உண்டு உறை பள்ளியில் (Boarding School) முடித்த பின்னர், அடுத்த 2 வருட காலத்திற்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் கட்டாய ராணுவச் சேவையில் இருந்து இருக்கிறார். அங்கேதான் எனது தொழில் ஆர்வத்திற்கான விதை விதைக்கப்பட்டது என்கிறார் அருண். கடுமையான ராணுவப் பயிற்சிகளுக்கு இடையில், ராணுவத்தின் ரோந்து பணிக்குத் தேவைப்படும் மென்பொருட்களை உருவாக்கும் பணி கிடைத்து இருக்கிறது. அந்தப் பணியில் அருண் காட்டிய ஆர்வமும் ஈடுபாடும், அவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை மட்டுமல்ல, எதிர்காலத்தில், தனது தொழில் எந்தத் துறையில் இருக்க வேண்டும் என்ற ஒரு வழிகாட்டுதலையும் கொடுத்தது என்கிறார் அருண்.

ராணுவப் பயிற்சி முடிந்த பின்னர், தாயகத்தில் பொறியியல் படிப்பு படிக்கும் போதே கல்லூரித் தோழர்களுடன் சேர்ந்து சிறிய அளவில் தொழிலில் ஈடுபட்டது அவரது அடக்க முடியாத தொழில் ஆர்வத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னர், சிங்கப்பூர் திரும்பிய அருண், பிரபலமான ஜப்பானிய நிறுவனமான NECல் பணியில் அமர்ந்து இருக்கிறார். இதுவல்ல எனது தேனீர்க் கோப்பை (this is not my cup of tea) என்ற எண்ணம் மேலோங்கி இருந்த அருணுக்கு ஒரு வருடத்திற்கு மேல் அந்தப் பணியில் தொடர முடியவில்லை. அதே நேரத்தில், சிங்கப்பூரில் மிகப் பிரபலமான நகைக் கடையான “அபிராமி ஜுவல்லர்ஸின்” உரிமையாளரான தகப்பனார் பழனியப்பன், குடும்பத் தொழிலில் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கிறார்.

ஒரு பக்கம், ஒரு சர்வதேச நிறுவனத்தில், முன்னேறுவதற்கான எல்லா சாத்தியங்களும் உள்ள நல்ல வேலை, மற்றோர் பக்கத்தில், நல்ல நிலையில் வளர்வதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ள குடும்பத் தொழில். சாதாரண மனிதர்களுக்கு மிகவும் குழப்பம் கொடுக்கக் கூடிய சந்தர்ப்பம். ஆனால், எனக்குப் பிடித்த துறையில், சொந்தத் தொழில் என்ற மாறாத கொள்கையுடன் இருந்த இருந்த அருணின் அந்த நேரத்திய வாழ்க்கை பற்றிய முடிவை இப்போது நினைத்தாலும் பிரமிப்பாய் இருக்கிறது.

வேலையை விடுவது எளிதாய் இருந்த அருணுக்கு, குடும்பத்தாரை எளிதாய் சமாதானப் படுத்த முடியவில்லை. நீண்ட விவாதங்கள் ஆலோசனைகளுக்குப் பிறகு, அருண் தனது தொழில் நுட்ப அறிவைப் பயன்படுத்தி, அபிராமி ஜுவல்லர்ஸின் முக்கியமான வர்த்தகப் பரிமாற்றங்களைத் தானியாக்கப் படுத்திக் (to automate) கொடுப்பதன் வாயிலாக தனது திறமையைப் புரிய வைத்து, அருண் தனது கனவான, மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனத்தைத் தொடங்குகிறார்.

முதல் அனுபவம், நாணய வர்த்தக (Forex Trading) நிறுவனங்களுக்கு வலைத்தளம் அமைத்துக் கொடுப்பதில் தொடங்குகிறது. இளங்கன்று பயமறியாது என்பது உலக நியதி என்பதால், நாணய வர்த்தகத்தின் பரிமாற்றங்களைப் பார்த்த அருணுக்கு, கூடுதல் தொழிலாக நாணய வர்த்தகத்தில் ஈடுபடத் தோன்றுகிறது. நாணய வர்த்தகத்தில் வெற்றி என்பது ஒரு பிடிபடாத சூட்சுமம் என்பது, கையைச் சுட்டுக் கொண்ட பின்புதான் உணர்ந்து கொண்டதாய் சொல்கிறார் அருண்.

அந்தச் சமயத்தில் ஏற்பட்ட, நிதி நெருக்கடியைச் சமாளிக்க, தனது சிறுவாட்டு நகையைக் கொடுத்து உதவிய தனது மனைவி ராஜலட்சுமியை, தனது தொழில் வளர்ச்சியின் மிக முக்கியமான பலம் என்று குறிப்பிடுகிறார் அருண். இரண்டு சிறு குழந்தைகள், பெரிய வீட்டுடன் கூட்டு குடும்பம், என்ற பொறுப்புக்களுடன், தொழிலும் தோள் கொடுப்பதாய் ராஜலட்சுமியைப் பற்றி நெகிழ்வுடன் குறிப்பிடுகிறார் அருண்.

அருண் தன்னுடைய முதல் பெரிய தொழில் வாய்ப்பு என்று குறிப்பிடுவது LISHAவுக்குச் செய்து கொடுத்த மென்பொருள் தகவு (Software). அது தனது தொழில் முனைவில் ஒரு மைல்கல் என்று குறிப்பிடும் அருண் அது தனக்கு ஏராளமான தொழில் தொடர்புகளுக்கு மேற்கோளாய் அமைந்தது என்று நன்றியுடன் நினைவு கூறுகிறார். தனது கல்லூரித் தோழர் மூலம் கிடைத்த “பவர் சோப்” நிறுவனத்தின் ERP அமைக்கும் பணியும் ஒரு முக்கியமான திருப்பு முனை என்கிறார் அருண்.

4 மென்பொருள் வடிவைமப்பாளர்களுடன் தொடங்கபட்ட ACE NURA இன்று 40 வடிவைமப்பாளர்களுடனும், 4 பராமரிப்புப் பொறியாளர்களுடனும் வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.

நண்பர்களுக்காக வேடிக்கையாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆபரணம், உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட ரசிக்கப்பட, பிரத்தியேக ஆபரண வடிமைப்பு மற்றும் தயாரிப்பு ஒரு கிளைத் தொழிலாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. இதனுடன் கூடவே, சந்தை நிலவரம் பார்த்துத் தங்கக் கட்டிகள் வர்த்தகம், ஆயத்த ஆடைகள் இறக்குமதி, சுற்றுலா முகவர் என்று படு சுறுசுறுப்பாக இருக்கிறது அருணின் அலுவலகம்.

ஒரு தொழில் நுட்ப வல்லுனராய், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில் மட்டுமே செய்வேன் என்று இல்லாமல், நமது வணிகர் குல வழக்கப்படி, அற வழியில் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்ற நிலைப்பாடே என்னை இத்தனை முற்சிகளில் ஈடுபட வைக்கிறது என்கிறார் அருண்.

இதுவரை அருணின் தொழில் முனைவர் என்கிற ஒரு பக்கத்தைப் பார்த்தோம். அவரது சமூக ஆர்வலர் என்ற அடையாளம் மற்றதைவிடப் பெரியதாய் இருக்கிறது. முதலாவதாக, முதுபெரும் தமிழ் அறிஞர், முனைவர் திண்ணப்பன் அவர்களுடன் இணைந்து TNT என்ற இலவசச் செயலியை (program) வடிவமைத்து, தமிழர் அல்லாதவர்களும் தமிழ் படிக்க உதவி இருக்கிறார். பிறகு அரும்பு என்ற மற்றொரு செயலி தமிழர்கள் தமிழ் கற்பதற்காக உருவாக்கி இருக்கிறார்.

அருண் தனது இந்த தொழில் முனைவர் பயணத்தில் இன்னொரு முக்கியமான ஆத்ம திருப்தி தரக்கூடிய செயல் என்று பெருமிதப் படுவது “RED PILL” என்ற ஒரு திட்டத்தின் மூலம் SICCIன் வாயிலாக, இளம் தலை முறையினருக்குத் தொழில் முனைய ஊக்குவிப்புப் பயிற்சி அளித்தலும் பயிற்சி முடிந்த பின்னர் அவர்களுக்கு தொழில் முனையும் பருவத்தில் ஆலோசனைகள் வழங்குவதும் ஆகும். இதுவரை 42 இளையர்களுக்கு பயிற்சி கொடுத்ததில் 10 இளையர்கள் தொழில் முனைவர்களாக உருவாகி இருக்கிறார்கள் என்ற செய்தி, IBCNன் நோக்கத்தை மிகவும் ஒத்து இருக்கிறது.

தகப்பனார் பழனியப்பன் அவர்களின் சமூகத் தொண்டே இதற்கு உந்துதல் என்று சொல்லும் அருண், தலைமைப் பண்பு, தொழில் திறமை, கடை சிப்பந்திகளின் முன்னேற்றத்தில் அக்கறை மற்றும் தமிழ்த் தொண்டுஆகியவற்றில் தகப்பனார் தந்த பயிற்சி தனது தொழில் வளர்ச்சிக்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் மிகவும் உதவியாய் இருப்பதாய் சொல்கிறார்.

மூத்த சகோதரர் தகப்பனாருடன் தொழிலில் இணைந்து கொள்ள, சகோதரியும் சிங்கப்பூர் நகரத்தாரை மணமுடித்து உள்ளுரிலேயே இருப்பதால், முழுக் குடும்பத்தின் ஆதரவும், ஆலோசனையும் கை நீட்டியவுடன் உடனடியாகக் கிடைக்கிறது என்கிறார் அருண்.

புதிய தொழில் முனைவர்களுக்கு அருண் சொல்லும் செய்தி “உங்களை நம்புங்கள்”, “முயற்சிகளைத் தவிர்ப்பதற்கு காரணம் சொல்லாதீர்கள் – உங்களது முதல் முயற்சி தவறான பாதையில் போனால் கூட, நீங்கள் பயணிக்கப் பயணிக்க சரியான பாதைக்கு மாறிக் கொள்வீர்கள்”. இது தொழில் முனைவர்களுக்கு மட்டுமல்ல எல்லா இளையர்களுக்கும் பொருந்தும் போல இருக்கிறது.

அவரது எதிர் காலத் திட்டங்கள் பற்றிக் கேட்ட போது, முன்பு இருந்ததைக் காட்டிலும் கூடுதல் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது அருணின் குரலில். தொழிலை அமெரிக்காவுக்கு விரிவு படுத்த வேண்டும், சிங்கப்பூர் சுற்றுலாத் துறைக்குத் தேவையான புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய செயலி உருவாக்க வேண்டும் என்று அடுக்கியவர், IBCNற்கு அதே தொழில் நுட்பத்தில் செயலி உருவாக்கட்டுமா என்று கண்ணைச் சிமிட்டுகிறார்.

அருணின் அபரிமிதமான நம்பிக்கையைப் பார்த்த போது பாரதியின் “பெரிதினும் பெரிது கேள்” என்கிற வாக்கு நினைவுக்கு வந்தது.

பேட்டியும் எழுத்தும் – சு. காசி விசுவிசுவநாதன், வேந்தன்பட்டி.