Chockalingam Palaniappan

Father’s Name:S.Palaniappan

Family/House Name: A.KR.SP.S.PL

Hometown: A.Thekkur

Kovil & Pirivu:Ilayathakudi Okkur

Spouse Name: Saraswathi Chockalingam

Spouse Birthtown: Nerkuppai

E-mail ID: chuckpalonline@yahoo.com

Website: www.theatem.com ; www.noble-agro.com

Business: IT Services, Hybrid Vegetable seeds, Logistics and others

Company name & Address: ATEM & NOBLE Group of Companies , No: 7 1/2, McNichols Road, Hari Krupa 2nd floor, Chetpet, Chennai – 600 031.

No. of Employees: 200 + employees

சக் பால்… துடிப்பான இளைஞர். அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிபுணர். இந்தியாவின் பசுமைப் புரட்சியில் குறிப்பிடத்தக்க பெயர் பெறப்போகும் விவசாய விஞ்ஞானி. எதிர்காலத்தில் இந்தியத் தொழில்துறையையில் கலக்கப் போகும் வல்லவர்.

யாரோ ஒரு வெள்ளைக்கார சக் பால் பற்றி நமக்கு என்ன அக்கறைஎன்கிறீர்களா..? இவர் அக்மார்க் நகரத்தார். நம்ம சொக்கலிங்கம் பழனியப்பனைத் தான் அமெரிக்காவில் அப்படி அழைத்திருக்கிறார்கள். ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா, ரோஜா தானே! அதன் வாசமும், மணமும் எப்போதும் மாறாது என்பது போல, நம்மவர்களுக்கே உரிய புதுமைக் குணமும், தொழில் ஆர்வமும் கொண்ட சக் பால் ‘இருக்கட்டும் விடு..!’ என பெயரை மாற்றிக் கொண்டு ஜோராக பிஸினஸ் செய்கிறார்.

அப்பா பழனியப்பன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளராக இருந்தவர். வங்கி அதிகாரி என்பதால், அவர் மகனுக்குக் கற்றுத் தந்த மந்திரம்…‘பணம் சம்பாதிப்பது, குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல கடினமானது… ஆனால், செலவழிப்பது என்பது குண்டூசியால் பலூன் உடைப்பது போல வெகு சுலபமானது.’ என்பதைத்தான். தந்தை கோவை, எர்ணாகுளம், மும்பை என்று பல்வேறு ஊர்களிலும் பணியாற்றியதால், பல்வேறு கலாசாரங்களை, மனிதர்களைப் பார்த்து வளரும் வாய்ப்பு சக் பால்க்குக் கிடைத்துள்ளது.

பணத்தின் அருமை தெரிந்து கொள்ள, சக் பாலுக்கு இளமைப் பருவத்திலேயே பல சம்பவங்கள் உதவி இருக்கின்றன.

‘‘பத்து வயதுவரை, ஆயா வீட்டுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அறியாத அந்த வயதில் நடைபெற்ற சம்பவங்கள் இன்றளவும் என் வியாபார அறிவுக்கு பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறது. அப்போது அதுபற்றித் தெரியவில்லை. ஆனால், பின்னாளில் அவை எத்தனை சக்தி வாய்ந்த சம்பவங்கள் என்பது புரிந்தபோது, நம் சமூகம் பற்றி எனக்குள்ளே அப்படி ஒரு பெருமை.

 

சிறிய உதாரணம், சந்தைக்குப் போகும் ஆயா மொத்தமாக காய்கறிகளை வாங்கி வந்துவிடுவார். அதனைப் பிரித்து, அம்மாவுக்கு ஒரு பங்கு கொடுத்து விட்டு, ‘நீ எனக்கு ரெண்டு ரூபா தரணும்… மூன்று ரூபா தரணும்!’ என்பார். சின்னப் பையனாக இருந்தாலும், எனக்குள்ளே பெரிய உறுத்தலாக இது தோன்றியது. ‘பெற்ற மகளிடமே கணக்குப் பார்க்கிறாரே அவரது அம்மா… என்ன நியாயம்..?’ என்று அப்போது தோன்றியது.

ஆனால், பிற்காலத்தில் நான் என் அப்பாவிடம் பணம் பெற்று தொழில் தொடங்கி, அதில் சறுக்கல் ஏற்பட்டபோது, ‘இது அப்பாவின் பணம். அவருக்கு நாம் திருப்பித் தந்தாக வேண்டும்…’ என்ற எண்ணம் எனக்குள் ஓடியதற்கு, ஆயாவின் செயலும் ஒரு காரணம். நம் முன்னோர்கள் எதையுமே ஒரு காரண காரியத்தோடுதான் செய்திருக்கிறார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது…’’ என்கிறார் சக் பால்.

‘‘அதுமட்டுமின்றி, நமது சமூகத்தின்மேல் சிறுவயதில் எனக்கு அவ்வளவாக அக்கறை இருந்ததில்லை. எங்காவது வெளிநாடு செல்லும்போதும், புதிய நபர்களை சந்திக்கும்போதும் ‘சொக்கலிங்கம் பழனியப்பன்’ என்று அறிமுகம் செய்து கொண்டால், அவர்கள் மிகுந்த அக்கறையோடும், கரிசனத்தோடும் கவனிப்பதைக் காண முடிந்தது.

நம்முடைய பெயர்கள் எல்லாமே பிற சமூகத்தினின்றும் மாறுபட்டவை… வித்தியாசமானவை. பெயரைக் கேட்டதுமே, ‘தம்பி நகரத்தாரா..?’ என்று விசாரிக்கும் அளவுக்கு பிரபலமானவை.

‘ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா… உன் பேரைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாரா..?’ என்று பாடியது எனக்கே என்றுகூட தோன்றியது. நாம் நேர்மையானவர்கள், ஒப்பந்தம் மீறாதவர்கள், கணக்கில் சரியானவர்கள், பேச்சு பிறழாதவர்கள் என்று பல்வேறு நற்குணங்கள் அந்தப் பெயர்களின் பின்னே ஒளிந்துள்ளன.

இது, வர்த்தகரீதியாக பல இடங்களிலும் பயன்பட்டது கண்டு வியந்து போனேன். எத்தகைய சமூகத்தில் பிறந்திருக்கிறோம் என்ற பெருமை அப்போதுதான் எனக்குப் புலப்பட்டது. வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை. நம் முன்னோரின் புண்ணியம், செயல்பாடு பல்லாண்டுகள் கழித்தும், பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் டிஎன்ஏ நம் உடம்பில் ஓடுவதே பெருமையாக இருக்கிறது)…’’ என்று சிலிர்க்கிறார் சக் பால்.

‘‘சுமார் ஒன்றரை லட்சம் பேர்களை மட்டுமே கொண்டது (இருக்கும்) நம் சமூகம் , ஆனாலும் உலகின் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அதில் நம்மவர்களின் முக்கிய பங்கு இருக்கிறது. பல துறைகளில் டாப் டென் லெவலில் நமது பெயர்கள் இருக்கின்றன. இந்த மூளை வளம் கடந்த தலைமுறையிடம் (நம் அப்பாக்கள் காலங்களில்) தோற்றுப் போயின. இதற்கு என்ன காரணம்..?

இன்று நம் தலைமுறை தலைதூக்கி இருக்கிறது. நம் ரத்தத்தில் ஓடும் தொழில் ஆர்வம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கிறது. ஐ.பி.சி.என் போன்ற சர்வதேச நகரத்தார் வர்த்தக மாநாடுகள் அதனைத் தூண்டி விட்டுள்ளன. இவையெல்லாம், இனிவரும் நாட்கள் நமதே என்பதற்கான அறிகுறிகள்!’’ என்று விஞ்ஞான பூர்வமான விளக்கம் சொல்கிறார் சக் பால்.

மனிதர்களைக் கையாளுதல் மற்றும் நிதி மேலாண்மை தெரிந்து கொண்டால் எந்தத் தொழிலிலும் வெற்றி பெறலாம் என்பது சொக்கலிங்கத்தின் அனுபவ வாதம்.

‘‘நான் படித்தது, மெக்கானிகல் இன்ஜினியரிங். ஆனால், எனது டி.என்.ஏ வில் இருந்த நிதி பற்றிய அறிவு காரணமாக பேரேடு தயாரிப்பது, முதலீட்டிலிருந்து லாபம் எடுப்பது என்பது குறித்த அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. நூறு ரூபாய்க்கு வியாபாரம் செய்தால், 90 ரூபாய்க்குள் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அந்த அடிப்படை. இது தெரிந்தால் கைமுதல் தப்பித்துவிடும்.

இந்த அடிப்படை எனக்கு எங்கே பயன்பட்டது என்பதைச் சொல்கிறேன். 1995 ஆம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுக்குத் தேவை அதிகரித்தது. இந்தியாவிலிருந்து பலரும் வெளிநாடுகளுக்குச் சென்றபோது, எனக்குச் சற்றும் தொடர்பில்லாத மென்பொருள் துறை பற்றி ஆர்வமுடன் கற்றேன். முதலில் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றி, சிறிது காலத்திலேயே அமெரிக்கா சென்றேன். அங்கு மென்பொருள் தயாரிப்பில் என்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, நாமே தொழில் தொடங்கினால் என்ன..? என்ற கேள்வி எழுந்தது.

 

அப்பல்லோ மருத்துவமனை குடும்பத்தைச் சேர்ந்த எனது நண்பர் கிரீஷ் ரெட்டியுடன் இணைந்து தொழில் தொடங்கினேன். நிதி மேலாண்மை இங்கேதான் எனக்குப் பயன்பட்டது. நிர்வாகத்தில் ஒரு முக்கிய விதி இருக்கிறது. நமக்காகப் பணியாற்றுபவர்கள் மேல் நாம் அக்கறை கொண்டால், அவர்கள் நம் நிறுவனத்தின்மீது அக்கறை காட்டுவார்கள் என்பதே அது. எனது நிறுவனத்தில் பணியாற்றிய 200&க்கும் மேற்பட்ட பொறியாளர்களிடம் இதைச் செயல்படுத்தியதில் வெற்றி கிடைத்தது…’’ என்றார் சக் பால்.

அளவில் சிறிய பேட்டரியே ப்ளஸ், மைனஸோடு தான் பணியாற்றுகிறது. வியாபாரத்தில் மைனஸ் இல்லாவிட்டால் எப்படி..?

‘‘நானும் பல தோல்விகளைச் சந்தித்து அவற்றையெல்லாம் பாடமாக, படிக்கல்லாக மாற்றிக் கொண்டவன்தான். ‘தோல்விகள் என்பவை அப்போதைக்கு அதிர்ச்சி… பின்னாளில் கிடைக்கப் போகும் முதிர்ச்சிக்கான பயிற்சி…!’ என்று பாஸிட்டிவாக எடுத்துக் கொண்டேன்.

மருந்துக் கம்பெனி துவங்க முயற்சித்து, அப்பாவின் காசை காலாவதி ஆக்கியது… சிமென்ட் பிளான்ட் போட முயற்சித்து அதற்கான நிலத்தை வாங்கியதில் பிரச்னையில் சிக்கி, ‘ஆலையே வேண்டாம்’ என வெளியேறியது… ஸ்ட்ராபெர்ரி பிளான்ட் ஒன்று தமிழகத்தில் துவங்க வேண்டும் என்று பரீட்சார்த்தமாக முயற்சித்து பணத்தை இழந்தது… எத்தியோப்பியாவில் விதை வியாபாரம் செய்ய அரசுடன் ஒப்பந்தம் போட்டு, இறுதிக் கட்டம் வரை வந்தபின் அந்த வியாபாரத்திலிருந்து வெளியேற நேர்ந்தது என்று பல்வேறு காலகட்டங்களில் நான் களமிறங்கி, பின்னடைவான தொழில்கள் பல. தொடர்ந்து விழுந்து எழுந்ததில், விழுப்புண்கள் ஏராளம். விழுவது முக்கியமல்ல… அங்கிருந்து எத்தனை சீக்கிரம் எழுகிறோம் என்பதே முக்கியம்…’’ என்று அனுபவப் பாடம் சொல்கிறார் சக் பால்.

‘தோல்விக்குப் பயந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்..?’ என்று ஒவ்வொரு காலகட்டத்திலும், தன்னம்பிக்கையை விடாமல் புதிது புதிதாக முயற்சித்துக் கொண்டே இருக்கிறார் சக் பால். அவரது தொழில்கள் வேறு வேறு துறை சார்ந்ததாகவே இருப்பதைக் கவனித்தால், அவரது தேடல், சரியான துறை எது என்ற தேடுதலுடனே இருந்துள்ளது புரிகிறது. சாப்ட்வேர் துறையில் வெற்றி கண்டு, அமெரிக்காவில் பலமாக கால் ஊன்றி, பல கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டாலும், அவரது தாகம் அடங்கவில்லை.

அவரது அடுத்த தேடல், இந்தியாவின் இன்றைய தேவைக்கானதாக இருந்தது. பிறந்த மண்ணில் சிறந்த தொழிலதிபர் பெயர் பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன், வீரிய விதைகள் பக்கம் கவனம் திருப்பி இருக்கிறார்.

‘‘இன்று இந்தியாவின் முக்கிய பிரச்னை, விளை நிலங்கள் அழிக்கப்பட்டு வீடுகளாக மாறிக் கொண்டிருப்பது. இப்படியே போனால், விளைச்சல் முற்றிலும் ஒழிந்து செயற்கை உணவுகளைச் சாப்பிடும் நிலை வந்துவிடும். நிலங்கள் அழிக்கப்படுவதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அவற்றை சமன் செய்ய மேலைநாடுகளில் மகசூலை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக, ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் தக்காளி சாகுபடி செய்யும்போது, 5 டன் விளைச்சல் கிடைக்கிறது என்று கொள்வோம். வீரிய விதைகளைத் தேர்ந்தெடுத்து விதைக்கும்போது, அது, 20 டன்னாக கிடைக்கும். அதே ஒரு ஏக்கர், அதே உழைப்பு, அதே உரம், அதே தண்ணீர் பாய்ச்சல், பராமரிப்பு… ஆனால், விளைச்சல் மட்டும் 4 மடங்கு. விவசாயிக்கு செம லாபம் தானே!

ஐரோப்பியாவில் புழக்கத்தில் உள்ள இந்த வீரிய விதைத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் முயற்சித்து வெற்றி கண்டுள்ளோம். இதை நம் கிராமங்களில் செயல்படுத்தத் துவங்கி இருக்கிறோம். இப்படிப் புதுமையாக சிந்திக்கும்போது, நாம் மட்டுமே அந்தத் துறையில் ராஜாவாக இருக்க முடியும். லாபமும் பல மடங்கு கிடைக்கும் தொழிலாக அமையும்…’’ என்கிறார் சக் பால்.

நோபிள் அக்ரோ பயோடெக் என்ற பெயரில் செயல்படும் இத்தொழிலுக்கான தலைமை அலுவலகம், சென்னை சேத்துப்பட்டில் உள்ளது. பெங்களூரில் ஆராய்ச்சிப் பண்ணை அமைத்து, வீரிய விதைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

தொழில் செய்து வெற்றி பெற வேண்டும் என்பதே இவரது லட்சியமே தவிர, எந்தத் தொழிலில் ஜெயிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொள்ளவில்லை என்கிறார் இவர். எனவேதான், எந்த ஒரு புதிய நட்போ, அறிமுகமோ கிடைத்தாலும் அதனை வலுவாகப் பற்றிக் கொள்வது என்பதை தனது குணங்களில் ஒன்றாக வைத்துள்ளார்.

‘‘யார் எங்கே, எப்படிப் பயன்படுவார்கள் என்று தெரியாது. ஆனால், எல்லோராலும் ஏதாவது ஒரு பயன் இருந்தே தீரும். அதை மனதில் கொண்டு பழக வேண்டும் என்று சொல்ல வரவில்லை. கிடைக்கும் எந்த ஒரு நட்பையும் அலட்சியப்படுத்தாமல், அடுத்தமுறை அழைத்தால் அவர்கள் நம்மை அடையாளம் காணும் அளவுக்குப் பழகிக் கொள்ள வேண்டும். ‘ரிலேஷன்ஸ் பிரிட்ஜ் நாட் பர்ன்ட்’ என்பது என் பாலிஸி’’ என்று புதிய தலைமுறைக்கு ஆலோசனை சொல்கிறார் சக் பால்.

தொடரும் அவர், ‘‘தற்போதைய நிலையில் கல்வி நிறுவனங்கள் அமைப்பது, குழந்தைகளுக்கான ப்ளே ஸ்கூல் போன்றவை நல்ல வருமானம் தரக்கூடிய தொழில்களாகத் தெரிகின்றன. அடுத்து, உணவுப் பொருட்கள் உற்பத்தி, விற்பனை போன்ற துறை இருக்கிறது. ஒரு இடத்தை வாங்கி அதன்மீது தொழில் செய்வது பாதுகாப்பானதாக இருக்கிறது. அல்லது, இடத்தில் முதலீடு செய்துவைத்தால், அது நமக்காக உழைத்துக் கொண்டிருக்கும். நாம் வேறு ஒரு தொழிலைக் கவனித்துக் கொள்ளலாம். நான்காவது முக்கியமானது புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் பசுமைப் பாதுகாப்பு தொழில்நுட்பம் தொடர்பான தொழில்கள்.

இதில், எந்த ஒரு தொழிலையும் தைரியமாகச் செய்யலாம். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதுவே இந்தியாவை ஆளும் என்பது என் கணிப்பு..’’ என்று தொடங்கும் தொழில்கள் குறித்த பட்டியலை அளித்தார் சக் பால்.

அடுத்த தலைமுறை தொழில் வல்லுநர்களை உருவாக்குவது குறித்த பேச்சு வந்தது. ‘‘குழந்தைகளுக்கான எதிர்காலம் என்பது அவர்களது படிப்பிலேயே இருக்கிறது. அவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலையின் மீது சில கிரவுண்ட் நிலம் வாங்கிக் கொடுப்பதை விடுத்து, ஏதாவது ஒரு பட்டப்படிப்பை வெளிநாட்டில் கற்பிப்பதே அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது. இது, அவர்களுக்கு எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை!’’ என்றார்.

தொடர்ந்த பல தேடல்களுக்குப் பிறகு இப்போது சக் பால் தொடுவதெல்லாம் பொன்னாகும் அனுபவ வித்தையைக் கற்றிருக்கிறார். எதிர்காலத்தில் வளர்ச்சி அடையும் என நம்பும் பகுதியில் பல ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவிக்கிறார். அரசு சிப்காட் போல, பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தனியார் சிப்காட் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். வாவ், என்ன ஒரு பிரமாண்ட கனவு…!

புதிய துறை தேடல்களை நிறுத்துவதே இல்லை சக் பால். ‘பணத்துக்கு மதிப்பு இல்லை!’ என்ற நம் சொல்லுக்கு மதிப்பு இருக்க வேண்டுமானால், பணத்தை நிறைய சேர்த்துவிட வேண்டும்.

பேட்டி, கட்டுரை : எஸ்.பி. அண்ணாமலை