N.Valliappan

Father’s Name:S.Nagappan

Hometown: Natarajapuram

Kovil & Pirivu:Illupakudi

Education: B.Sc, MBA

Spouse Name: V. Muthu

Spouse Birthtown: Rayavaram

E-mail ID: valliappan@ezvidya.com

Website: www.ezvidya.com

Business: Learning Research and development

Company name & Address: EZ Vidya Pvt. Ltd., Bushido Towers 523/3 Udayampalayam Road,Nava India, Avinashi Road,Coimbatore – 641 028.

No. of Employees: 170 Employees

Awards /Recognition:

  • Game Changer “by ET NOW India
  • Mart Leaders of Tomorrow Award 2012
  • mBillionth South Asia Award 2012 as Juror’s Distinction
  • SKOCH Digital Inclusions “Gold” Award 2012

கல்வித் துறை வழிகாட்டி’ வள்ளியப்பன்!

வேலையைப் பொறுத்துத்தான் பொதுவாக பெண்ணே கொடுப்பார்கள். பெரிய மென்பொருள் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் இருந்த நான், திருமணத்துக்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் அதனை விட்டு விலகினேன். காரணம் என்னுடைய தொழில் ஆர்வம்!’’- என்று திடுக் திருப்பத்தோடு ஆரம்பிக்கிறார் கோவையைச் சேர்ந்த என்.வள்ளியப்பன்.

கல்வித் துறையில் புதுமைகள் படைத்துக் கொண்டிருக்கும் வள்ளியப்பன், ஈஸி (EZ) வித்யா என்ற பெயரில் தனி பயிற்சி நிறுவனம் உருவாக்கி, குழந்தைகளின் கல்வியை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். மாணவர்களுக்குக் கல்வி போதிக்கும் முறையில் புதுமைகளைப் புகுத்தி, சமூக அக்கறை காட்டும் அதேநேரம், அதில் சிறப்பான வருமானமும் பார்க்கும் புத்திசாலித்தனமே இவரது பலம்.

‘‘நான் பிறந்தது நடராஜபுரம். எங்க அப்பச்சி நாகப்பன், தெக்கூர் அரசுப் பள்ளி ஆசிரியர். பிஸினஸ் ஆரம்பிக்கிறதுக்காக, கோவை வந்தார். பேப்பர் வாங்கி விற்கிற தொழிலில் இறங்கினார்.

நாங்க ஆச்சி, தங்கச்சின்னு மொத்தம் மூணு பிள்ளைங்க. நான் படிச்சது, வளர்ந்தது எல்லாமே கோயமுத்தூர்லதான். இன்ஜினியரிங் சீட் கிடைக்கலை. பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸும், எம்.பி.ஏ-வும் முடிச்சேன். கேம்பஸ் இன்டர்வியூவிலே டி.சி.எஸ்-ல வேலை கிடைச்சது. வேலைக்குப் போயிட்டிருந்தாலும் எனக்கு சின்ன வயசிலே இருந்தே அய்யா, அப்பச்சி வழியிலே நாமும் ஏதாவது சொந்தமா தொழில் பண்ணனும்ன்னு ஒரு ஆசை.

ஒருத்தர் வாழ்க்கையிலே கல்யாணம் ஒரு திருப்புமுனை. என் வாழ்க்கையிலே அது இரட்டைத் திருப்புமுனை. கல்யாணம் முடிஞ்சதும், அந்த லைஃபை ரெண்டு மாசம் என்ஜாய் பண்ணிட்டு, கம்ப்யூட்டர் சென்ட்டர் ஆரம்பிச்சேன். 1996 ஆம் வருஷம் அது. கம்ப்யூட்டர்கள் வரவு ஆரம்பிச்சு, மல்ட்டி மீடியாவுக்கான கதவுகள் திறக்க ஆரம்பிச்சிருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி யை நோக்கி அடுத்த தலைமுறை போக ஆரம்பிச்ச காலகட்டம். அதனால, குழந்தைகளை டார்கெட்டா வெச்சு நம்ம தொழிலை ஆரம்பிச்சா, அடுத்த பல வருஷங்களுக்கு எவர்க்ரீனா இந்தத் தொழிலைப் பண்ண முடியும்ன்னு தோணுச்சு…’’ என்று தாம் தொழிலுக்குள் வந்தது பற்றிச் சொன்னார் வள்ளியப்பன்.

ஆரம்பம் நன்றாக இருந்தாலும், உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி, கம்ப்யூட்டர்களைத் திணறடித்த ஒய் டூ கே பிரச்னை என்று தொழில் ரீதியான பிரச்னைகளும், கோவை குண்டு வெடிப்பு என்று சமூக/தீவிரவாதரீதியான பிரச்னைகளும் இவருக்கு முன் பூதாகரமாக வில்லத்தனம் செய்திருக்கின்றன.

அவசரமாக அடுத்த கட்டம் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம். நதியின் போக்கில் செல்லும் சருகாக இருந்தால் அதில் சுவாரஸ்யம் ஏது..? பிரச்னைகளே வள்ளியப்பனுக்கான திருப்புமுனைகளாக மாறி இருக்கின்றன.

‘திக்கெட்டும் சென்று திரவியம் தேடு!’ என்பது போல, தெரிந்து வேலையை தேடிச் சென்று அளித்தால் என்ன என்று தோன்றியது. கம்ப்யூட்டர் கற்பித்தலையே பள்ளிகளுக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு காத்திருந்தாள் அதிர்ஷ்ட லக்ஷ்மி.

‘‘பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி கற்பித்தபோதுதான், மாணவர்களுக்கான கற்பித்தல் முறையே மனப்பாடத் திட்டமாக மட்டுமே இருப்பது புரிந்தது. புத்திசாலிக் குழந்தைகளை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பது புரிந்தது. முத்தம் கேட்டால் சிறிதும் யோசிக்காமல் கொடுத்து விடுகிற குழந்தைகள், கையில் வைத்திருக்கும் முறுக்கைக் கேட்டால் நிதானமாக யோசித்தபின்னரே தருகின்றன. அந்தளவுக்கு பொருள் சார்ந்த விஷயத்தில் குழந்தைகளின் அறிவு, சுயமாகவே அதிகரித்திருக்கும் காலமிது. அதனைச் சரியான வழியில் திசை திருப்பிவிடும் ஆற்றலில், கல்வி முறையில் பிரச்னை என்று புரிந்தது.

அதனை மாற்றுவதற்கு, கல்வி போதிக்கும் ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்தி, அதில் புதிய முறையை புகுத்தலாமே!’ என்று சிந்தித்தேன். ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது என்று முடிவெடுத்தபோது, விப்ரோ நிறுவனம் கை கொடுத்தது. 2004 ஆம் ஆண்டில், ஆசிரியர் பயிற்சியை ஆரம்பித்தோம். முதல் ஆண்டிலேயே 3,000 பேருக்கு பயிற்சி அளிக்கும் அளவுக்கு வளர்ந்தோம்.

ஆசிரியர் பயிற்சிப் பணியில் மூன்றாண்டுகள் இருந்த காலகட்டத்தில் நான் உணர்ந்த ஒரு விஷயம், கல்வித் துறை என்பது ஒரு பெரிய வர்த்தகத்தை உள்ளடக்கி உள்ளது என்பதுதான். நாங்கள் கல்வியை வர்த்தகம் செய்யவில்லை. கல்வி போதிக்கும் முறையை வர்த்தகப் புள்ளியாக மாற்றிக் கொண்டோம். இப்படி சிறிய அளவில் உருவாகி பெரிதாக வளர ஆரம்பித்தது, ஈஸி வித்யா நிறுவனம்…’’ என்ற வள்ளியப்பன், தொடர்ந்தார்.

‘‘பள்ளியில் ஒரு குழந்தை பெறும் அனுபவம் எத்தனை சுகமானது என்பதில்தான் போதிக்கும் முறை வேறுபடுகிறது. (எக்ஸ் பீரியன்ஸ் ஆஃப் தி சைல்ட் இன் தி கிளாஸ் ரூம்!) எல்லாப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம், பரீட்சைதான். ஆனால், பள்ளிகளின் மதிப்பெண்கள் மாறுவதும், குழந்தைகளின் புத்திசாலித்தனம் ஏறுவதும் எப்படி..? அதனைக் கற்பிக்கும் முறைகள்தான். அந்த முறைகளை ஆசிரியர்களுக்கு அளித்து, அப்படியே குழந்தைகளுக்கு அதைக் கொண்டு சென்றோம்.

ஒரு குழந்தையிடம் நூறு என்று எழுதச் சொன்னால், அதை ஒன்று பூஜ்யம், பூஜ்யம் என்று ஓவியம் போல உணர்ந்து எழுதுகிறதா… அல்லது அதன் மதிப்பை உணர்ந்து எழுதுகிறதா என்பது முக்கியம். அக்பரின் சாதனைகளை நான் ஏன் படிக்க வேண்டும்..? என்ற கேள்வி குழந்தையின் மனதில் தோன்றுகிறது. இதற்கு ஆசிரியர் என்ன பதில் சொல்கிறார் என்பதில்தான் குழந்தையின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. படிச்சால்தான் மார்க் கிடைக்கும் என்றால், அக்குழந்தை அந்தப் பாடத்தை வேண்டா வெறுப்பாகத் தானே படிக்கும்..? சிலபஸ் என்பது ஒரு அவுட்லைன். அவ்வளவுதான். அதில் இருந்து வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கண்டுபிடிப்பதே மிக முக்கியமாகும் என்பதை எங்கள் கல்வி முறை மூலம் ஆசிரியர்களுக்குப் புரிய வைத்தோம். இதற்காக நாங்கள் தொடர்ந்து ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வந்தோம். கிறிசலஸ் பயிற்சி முறை என்று இதற்குப் பெயர் வைத்தோம்.

ஒரே இடத்தில், ஒரே நபரால், ஒரே மாதிரி பராமரிக்கப்படுகிற இரண்டு செடிகளே பலநூறு வித்தியாசங்களுடன் இருக்கிறது. ஆனால், ஒரு பள்ளியில் படித்து வருகிற மாணவர்கள் ஒரே குணநலனுடன் இருக்கும்படி இன்றைய கல்வி முறை ஃபேக்டரி மோல்டிங் போல இருக்கிறது.

‘அவன் அப்படிப் படித்தான்… இன்ஃபோசிஸில் வேலை கிடைத்தது. அதேபோல் படித்தால் உனக்கும் கிடைக்கும்!’ என்று போதிக்கப்பட்டு, மாணவர்களின் தனித்தன்மை அவர்களறியாமல் அழிக்கப்படுகிறது. வேலை வாய்ப்பு… அதன் மூலம் வருமானம்ங்கிறதிலேதான் இருக்கே தவிர, புத்திசாலித்தனத்தை அதிகப்படுத்தும் முயற்சியா இல்லே! குழந்தைகளுக்கு இயல்பா உள்ள தனித்தன்மையை நாம மழுங்கடிச்சுடறோம்.

நம் நாட்டில் ஆயிரக்கணக்கான மென்பொருள் பொறியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பிற நிறுவனங்களில் பணியாற்றுவதற்காகவே தயாரிக்கப்படுகிறார்கள். எனவேதான், ஐ..பி.எம்., ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களிலே எப்படி வேலைக்குச் சேர்வதுன்னு தான் நம் நாட்டுக் குழந்தைகள் யோசிக்கிறாங்களே தவிர, அதுபோன்ற நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவங்களுக்கு ஏற்படுத்த முடியலை…’’ என்று பொங்குகிறார் வள்ளியப்பன்.

இவரால் எல்லாப் பள்ளிகளிலும் போதிப்பு முறையை மாற்ற முடியாவிட்டாலும், தமிழகத்தில் 250 பள்ளிகளில் கிறிசலஸ் பயிற்சி முறையை அளித்து வருகிறார். இது இந்தியாவின் 5 மாநிலங்களில் உள்ள 700 பள்ளிகள் என்ற எண்ணிக்கையில் உள்ளது. அரசுப் பள்ளிக்கான பயிற்சி என்றால், விப்ரோ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கின்றன. தனியார் பள்ளிகள் என்றால், அதன் நிர்வாகம் இவர்களுக்கான கட்டணத்தை அளிக்கிறது. எங்களுக்கு திருப்தியான வருமானம் கிடைப்பதால், இந்தத் தொழிலை நாங்கள் மிகவும் சந்தோஷமாக செய்து வருகிறோம்.

ஏப்ரல், மே, ஜூனில் ஆரம்பப் பயிற்சியும், வருடம் முழுக்க பயிற்சி குறித்த கண்காணிப்பும் என்பது ஈஸி வித்யா நிறுவனத்தின் பணியாக இருக்கிறது. பள்ளிக்குப் பள்ளி வேறுபாடு இருக்கும் வண்ணம் பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சென்னையில் இரு அலுவலகம் அமைத்து வெற்றிகரமாக தொழில் செய்கிறார். கம்ப்யூட்டர் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி என்று வள்ளியப்பனின் கல்வித் துறை சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

‘‘வேலையா, தொழிலா..?ன்னு என்கிட்டே யாராவது கேட்டா, என் வாழ்க்கைதான் அவங்களுக்கு நான் தர்ற பதில். நான் பணியாற்றும்போது, 2,400 ஆக இருந்த டி.சி.எஸ்-ல இன்றைக்கு ஊழியர்களோட எண்ணிக்கை மூணு லட்சம். இன்னைக்கு உயர் பதவியிலே, இருந்திருந்தாலும் நான் மூணு லட்சத்திலே ஒருத்தனாதான் இருந்திருப்பேன். ஆனா, சொந்தத் தொழில் தொடங்கினதால, 170 ஊழியர்களைக் கையில் வெச்சிருக்கேன். மேலும் பலரை என்னோட இணைச்சுக்கிற பலம் என்கிட்டே இருக்கு…’’ என்கிறார் வள்ளியப்பன்.

‘‘அடுத்த பத்தாண்டுகளில் எந்தத் தொழில் அல்லது துறை உலகைக் கோலோச்சும்..?’’ என்று கேட்டோம்.

‘‘அது இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை…’’ என்று சிரிக்கிறார் வள்ளியப்பன். இந்த விஷயம் நடக்கப் போகுதுன்னு தெரியாம தானே, நடுவிலே பேஜர்ன்னு ஒரு கருவியைக் கண்டுபிடிச்சு, வந்த வேகத்திலே அது காலாவதியானது. அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு என்ன நிலைங்கிறதை இப்போ கணிக்க முடியாது. அந்தக் கண்டுபிடிப்பின் ஆரம்பமே ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இருக்கலாம்!’’ என்று தன் வாதத்துக்கு உதாரணங்களை அடுக்குகிறார் வள்ளியப்பன்.

இதுபோன்ற தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய தொழில்களே எதிர்காலத்தில் பெரும் வெற்றி பெறும் என்பது இவரது கருத்து. சிறு பொறியாகத் தோன்றும் சிந்தனையை வடிவமைத்து அதில் நம்பிக்கையோடு செயல்படுவது மட்டுமின்றி, புதிய மாற்றங்களுக்கு அதனைச் சீரமைத்தவர்களே இன்று உலகை ஆளும் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்கிறார் வள்ளியப்பன். சிந்தனை சீராக இருந்தாலும் தொழிலின் போக்கைக் கணித்து காலமாற்றத்துக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வதும் அவசியம் என்பது இவரது கருத்து. ‘‘அதைக் கணிக்க முடியாததால்தான், உலகின் பிரமாண்ட கோடீஸ்வரர்கள் பட்டியலே பத்தாண்டுகளுக்கு ஒருமுறை முற்றிலும் மாறி இருக்கிறது. முந்தைய பத்தாண்டுகளில் டாப் டென் பட்டியலில் இருந்தவர்கள் இந்த பத்தாண்டில் இருக்கிறார்களா..? என்பதைக் கவனித்தாலே உலகம் எப்படிச் செல்கிறது என்பது புரிந்துவிடும்…’’ என்று உலக உதாரணங்கள் காட்டுகிறார்.

தொடர்ந்து தொழிலில் களமிறங்கும் இளைய தலைமுறை எதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் சொன்னார்.

‘‘எது சந்தோஷம் தருகிறதோ, அதை மட்டும் செய்யுங்கள். அடுத்தவர் சொல்கிறார்… அவர் வளர்ந்த விதத்தை அப்படியே நாமும் காப்பி அடிப்போம்… அவர் மாதிரியே முன்னேறுவோம்!’ என்றெல்லாம் தப்புக் கணக்குப் போட வேண்டாம். சச்சினின் ஸ்ட்ரோக்கை வீடியோவில் பார்த்த எவரும் சச்சினாக முடியாது. நமக்கான பந்து வேறு கோணத்திலும் வரக்கூடும் இல்லையா..?

நாம் யார் என்று புரிந்து கொள்வது முக்கியம். நம் பலத்தின் மீது நம்பிக்கை வைத்துத்தான் தொழிலில் இறங்க வேண்டுமே தவிர, பிறர் பலத்தை ஓரளவுக்குத்தான் நம்ப வேண்டும்.

தொழில் என்பது நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும். தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லாத தொழில்களில் வெற்றி பெற முடியாது.

தொழிலில் இருப்போர் அனைவருக்கும் தலைமைப் பண்பு மிகமிக அவசியம். பிஸினஸோ, வாழ்க்கையோ… நீங்க என்ன செய்றீங்கன்னு பார்த்து, அதை மத்தவங்க ஃபாலோ பண்ணனுமே தவிர, நீங்க வாய் வழித் தகவலா சொல்றதை அவங்க ஃபாலோ பண்ணனும்ன்னு எதிர்பார்க்கிறது தப்பு.

தொழிலில் நேர்மையும், வெளிப்படைத் தன்மையும் இருப்பது எப்போதுமே அவசியம். தொழிலில் நேர்மை இருந்தால், தலை தானாகவே உயர்ந்து நிற்பதைப் பார்க்க முடியும்…’’

பலரது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி, ( change to prosperous business ) உயர்ந்து நிற்கிறார் வள்ளியப்பன்.

பேட்டி, கட்டுரை : எஸ்.பி. அண்ணாமலை