Muthukaruppan Chettiar (M.K.Chettiar)

Father’s Name: Ramaswamy Chettiar

Family/House Name: Chatrathar veedu

Hometown: Natarsankottai

Kovil & Pirivu: Surakkudi

Education: BBA, M.Sc (Documentation)

Spouse Name: Nachammai

Spouse Birthtown: Kallal

E-mail ID: chettiar@bharatbook.com

Website: www.bharatbook.com

Business: Aggregator of Market Research Data

Company name & Address: Bharat Book Bureau – 808, Real Tech Park, Sec-30 A, Vashi, Navi Mumbai – 400703

No. of Employees: 15 Employees

Awards/Recognition:Best Sales Person Award from then President of India, Shri. Zail Singh Multiple Paul Harris Fellow

மாத்தி யோசித்த எம்.கே செட்டியார்

‘‘புதிதாகத் தொழில் தொடங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, தாம் காலடி வைக்கப் போகும் துறை சரிதானா… போட்டியாளர்கள் யார்… வாடிக்கையாளர் வட்டம் விரிவடையுமா..? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். அவற்றுக்கான விடையை எங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் பல லட்சம் அலசல் கட்டுரைகள், சர்வே ரிப்போர்ட்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இவை திறன்சார் தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்பட்டவை என்பதால் நம்பகத் தன்மை அதிகம். இவற்றை மருத்துவம், வங்கி, எரிசக்தி போன்ற பல்துறை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்’’ என்கிறார் எம்.கே செட்டியார்.

செல்போன் நெட் ஒர்க் உருவாக்குவதில் தொடங்கி, இன்ஜினியரிங் கல்லூரி தொடங்குவது வரை குறிப்பிட்ட பகுதியில் நிலவரம் எப்படி..? என்ற ரிப்போர்ட்கள் கொட்டிக் கிடக்கின்றன. உலகின் எந்தப் பகுதியில் இருப்போரும் இந்தியாவிலோ அல்லது ஆசிய நாடுகளிலோ தொழில் தொடங்க விரும்பினால், அதற்கு முன் ஒரு முறை வந்து சென்றே ஆக வேண்டும் என்ற வகையில் இணையதளத்தை வளர்த்தெடுத்திருக்கிறார்.

‘ட்ரிப்பிள் ஏ’யை வைத்து பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ‘ட்ரிப்பிள் பி’யை வைத்து வென்றது இவர் ஒருவர்தான். பாரத் புக் பீரோ(BBB) என்பதன் சுருக்கமாக மூன்று “பீ”களைத் தன் இலச்சினையாக வைத்துள்ளார் இவர்.

‘புக் பீரோவில் புக் தானே இருக்க வேண்டும்… இங்கே வெறும் ரிப்போர்ட்களாக இருக்கிறதே!’ என்று அவரது இணையதளம் பற்றிக் குழந்தையின் இயல்போடு சந்தேகம் கேட்டோம். சுவாரஸ்யமாக விரிகிறது பின்கதை.

‘‘மதுரையில் , திருமங்கலத்தில் வட்டித் தொழிலும், தீப்பெட்டித் தொழிலும் செய்தார் தந்தை. மூன்று தங்கைகள், நான் ஒரே மகன் என்பதால், என் தந்தை என்னைத் தொழிலுக்குத் தயார் செய்ய நினைத்தார். ஆனால் நான் எனக்கென தனிப்பாதை வகுக்க விரும்பினேன்.

கல்லூரிப் படிப்பில், நிர்வாகம் அளித்த ஆண்டு உதவித் தொகை ரூ.250 படிப்புக்கு ஊக்கமாக இருந்தது. இதற்காக நான் நூலகத்தைப் பராமரிக்கும் உதவியாளர் பணியைச் செய்து தர வேண்டும். நாள் முழுவதும் லைப்ரரியில் கழிக்க வாய்ப்பு கிடைத்ததால், எனக்கு ‘லைப்ரரி சயின்ஸ்’ பட்டப் படிப்பு மீது ஆர்வம் வந்தது.

இதனைத் தொடர்ந்து, ‘டாக்குமென்டேஷன் ரிசர்ச் அண்ட் டிரெய்னிங் சென்ட்டர்’ என்ற வித்தியாசமான படிப்பில் சேர பெங்களூரு சென்றேன். இந்தியா முழுவதற்கும் 8 சீட்கள் மட்டுமே உள்ள இந்த படிப்பை முடிக்கும் முன்னரே பிரபல நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடும்.

இந்தப் படிப்பு என்பது அரசுத் துறைக்கும், ஐ.எஸ்.ஆர்.ஓ போன்ற வான்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும், தனியார் துறைக்கும்கூட இந்தப் படிப்பு பயன்படும். யாருக்கு என்ன தேவை இருக்கிறதோ, அதன் பின்னணித் தகவல்களை சேகரித்துத் தரும் வேலை அது. இன்று கூகுளைத் தட்டினால், எந்தத் தகவலும் கிடைக்கும் என்பது போல அன்று வசதி வாய்ப்பு இல்லை. அதனை பேப்பர்களாக சேகரித்து, ஒட்டுமொத்த ரிப்போர்ட்டாக அளிப்பது என்பதற்கான படிப்பு அது.

விளம்பரத் துறை என்று எடுத்துக் கொள்ளுங்கள். என்ன மாதிரியான விளம்பரங்கள் இதற்கு முன் செய்யப்பட்டன… அதற்கான வரவேற்பு என்ன… மக்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது… என்ன மாற்றங்கள் செய்தால், புதுமையாக கொண்டு சேர்க்க முடியும்… என்று பல்வேறு

கோணங்களிலும் ஆராய்ந்து தெளியும் அளவுக்கு தகவல் சேகரிப்பில் எனக்குப் பயிற்சி கிடைத்தது.

படிப்பை முடித்துக் கிடைத்த மூன்று வாய்ப்புகளில் என் அப்பா என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னது, சேல்ஸ் ரெப் பணி. காரணம், கடைசி வரை வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆவதைவிட, இந்தப் பணியில் வேலை கற்று, தொழில் தொடங்கும் வாய்ப்பு இருப்பதை அப்பா சுட்டிக் காட்டினார். எனக்கும் சரியென்று பட்டது.

புத்தகப் பதிப்பாளராக பல துறைகளிலும் கோலோச்சிய நிறுவனம் அது. அதன் நிறுவனர் சச்தேவ் என்ற பஞ்சாபி. பிற நிறுவனங்களால் கொடுக்க முடியாத தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களை, உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் தேடித் தர ஒரு நபரைத் தேடிக் கொண்டிருந்த அவர், சரியாக என்னைத் தேடிப் பிடித்தார்.

ஐந்தாண்டுகள் தொடர் பணியில் 1983 ஆம் ஆண்டு வாக்கில், குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் கையால் ‘பெஸ்ட் மார்க்கெட் மேன்’ விருது பெறும் வாய்ப்பு கிடைத்தது. மஸ்கட்டில் யூனிலிவர் நிறுவனத்தில் இரு ஆண்டும், சவுதியில் பெரும் நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றி அனுபவம் பெற்றேன். பெரிய புத்தகத்தை, போட்டோ நெகடிவ் போல மைக்ரோ ஃபிலிம் தயாரித்துத் தரும் பணி இது. ஆண்டுக்காண்டு வரும் பெரும் கோப்புகளை ஃபிலிமாக மாற்றிக் கொண்டிருந்தன பல்வேறு நிறுவனங்கள். நல்ல வாய்ப்புகள் கண் முன்னே தென்பட்டதைத் தொடர்ந்து, கிடைத்த அனுபவத்தை வைத்துத் தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருந்தேன். அப்போது குவைத் போர் ஏற்பட்டது.

‘புக்குக்கே பேக் அப் எடுக்கிற பணியைச் செய்கிற நாம், நமக்கு ஒரு ‘பேக் அப்’ இல்லாமல் இருந்தால் எப்படி..?’ என்று யோசித்தபோது உருவான பாதுகாப்பு கவசம்தான், ‘பாரத் புக் பீரோ’ நிறுவனம்…’’ என்றார்.

‘‘ஒரே புத்தகத்தில் கவிஞர், எழுத்தாளர் ஆகிவிடுகிற தனிநபர் மட்டுமல்லாது, பதிப்பங்கள் பலவும்கூட புத்தகம் விற்க வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்க… எனது பாரத் புக் பீரோ அவர்களுக்கு வழிகாட்ட

வேண்டும் என்று முடிவெடுத்தேன். ‘உங்களது பதிப்பக புத்தகங்களில் பத்து பிரதிகள் எங்களுக்கு அனுப்பி வைத்தால், நாங்கள் அதை புத்தகப் பட்டியலாகத் தயார் செய்து, கல்வியகங்கள், நிறுவனங்கள் என்று தேவை உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் விற்றுத் தருவோம்…’ என்று என் மார்க்கெட்டிங் திட்டத்தை பதிப்பக உரிமையாளர் ஒருவரிடம் தெரிவித்தேன். இணையம் ஏதும் வராத காலத்திலேயே புத்தகச் சந்தை குறித்து யோசித்தேன் நான். பதிப்புத் துறையில் சம்பாதிக்க வேண்டும். ஆனால், கைமுதல் போட்டு எதையும் பதிப்பிக்கக் கூடாது. சரக்கை கைமாற்றி விட்டு லாபம் பார்ப்பதுதான் என் திட்டம். ஆனால், பேப்பர் கணக்கு, பேங்க் பேலன்ஸூக்கு வராது என்பது போல, திட்டமிட்டபடி பெரிதாக சோபிக்க முடியவில்லை.

முதல் போடாத முதல் வியாபாரம் முடிந்து போனது. இந்நிலையில்தான் மும்பை வந்தேன். மும்பை சாலைகள் தங்கத்தால் இழைக்கப்பட்டவை என்று சொல்வது உண்டு. எதைத் தொட்டாலும் வருமானம் தரும் பூமி இது.

மும்பையில் ஒரு ரிப்போர்ட் புத்தகத்தை வரவழைத்துத் தர வேண்டும் என்று கேட்டது எல் அண்ட் டி நிறுவனம். அதுவே என் தொழிலின் விதை. ஒரிஸாவில் ரூ.200 கோடி ரூபாய் முதலீட்டில் களமிறங்கப் போகும் அலுமினா சுரங்கத் தொழிலுக்குத் தேவையான தகவல்கள் அடங்கிய அந்தப் புத்தகம் அவர்களுக்குத் தேவைப்பட்டது. எனது தொடர்பு மற்றும் சாதுர்யம் காரணமாக பத்தே நாட்களில் வரவழைத்துத் தந்தேன். வெற்றிகரமான வியாபாரமாக அது அமைந்தது. அதைத் தொடர்ந்து மேலும் பல பணிகளை அவர்களுக்காக செய்து தந்ததுடன், அதைக் காட்டியே பல புதிய வாடிக்கையாளர்களை வளைத்தேன். ஒரே ஒரு புத்தகம் ஒருவரது வாழ்க்கையை மாற்றியது என்பார்களே, அது என் வாழ்க்கையில் இப்படியாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் ஏறி இறங்கி அவர்களின் தேவை பற்றிக் கேட்டறிந்தேன். கையில் இருக்கும் ரிப்போர்ட்டும் அவர்களின் தேவையும் பூர்த்தியான இடங்களில் அவற்றைப் பெற்றுத் தர ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் இணையம் மெல்ல உலகில் பரவ

ஆரம்பித்திருக்க… ஒரு சிறிய வெப்சைட்டாக அதை ஆரம்பித்தேன்…’’ என வியாபார விருத்தி பற்றி விரிவாகச் சொன்னார்.

பேரம் பேசாமல் வாங்கினால், பூக்கள் விற்பவள் முகத்திலும் பூக்களைப் பார்க்க முடியும். எம்.கே செட்டியார் இன்னும் ஒருபடி மேலே போய், பேரம் பேசவே கூடாத வியாபாரம்தான் பெஸ்ட் என்கிறார்.

‘‘கிளாஸ் மார்க்கெட்டிங், மாஸ் மார்க்கெட்டிங் என இருவகை இருக்கிறது. மாஸ் மார்க்கெட்டிங்கில் பேரம் பேசுதல் இருக்கும். அதை நான் எப்போதுமே விரும்புவதில்லை. கிளாஸ் மார்க்கெட்டிங்கில் சந்தை அளவு சிறிதாக இருந்தாலும், லாபத்தின் அளவு பெரிதாக இருக்கும்.

‘புக் மை டிராவல்’ என்று ஆரம்பிக்கப்பட்ட இணையதளத்தினரிடம் கார், பஸ், விமானம் என்று எந்த வாகனமும் இருக்காது. ஆனால், வெவ்வேறு நிறுவனங்களில் உள்ளவற்றை வாங்கி டிக்கெட் போட்டுத் தருகிறார்களே அதுதான் நான் இணையதளம் மூலம் செய்வது. எனது தளத்தில், விண்கலத்தில் இருந்து, விலங்கியல் வரை அனைத்து ரிப்போர்ட்களும் கிடைக்கும். இது கிளாஸ் ஆடியன்ஸைக் கொண்டது என்பதால், பூவைத் தேடி வரும் வண்டுகளாக வாடிக்கையாளர்கள் வந்து நின்றார்கள்.

’’ என்று சொல்லி நிறுத்தினார் எம்.கே செட்டியார்.

பொதுவான தேடுபொறியின் மூலம் கிடைக்கும் தகவல்களில் நம்பகத் தன்மை மிகக் குறைவு. பலவற்றையும் காட்டி நேரத்தைச் சாப்பிடும். எனது தளத்தில் தேவையான தகவல்கள் கிடைப்பதோடு, ஒரு ஒப்பீடும் கிடைக்கும். வாகனத் துறை பற்றி, பல்வேறு தரப்பின் ரிப்போர்ட்கள் கிடைப்பதால், எது சிறந்தது என்ற ஒப்பீடு அவர்களுக்கு எளிதாகக் கிடைத்து விடுகிறது. புதிதாக ஒரு விஷயத்தைத் தேடி வருவோர் எதிர்பார்ப்பது இதைத்தானே!

எங்கள் இணையதளத்தை, நிதித் துறை அமைச்சக அதிகாரிகள், டாடா, பிர்லா, ரிலையன்ஸ், ஐ.ஐ.எம் மாணவர்கள் என்று பலரும் பார்த்துப் பயனடைந்து வருகின்றனர். உலகின் அரிதான பத்திரிகைகளை ஆன்லைன்

மூலம் இந்தியர்கள் படிக்க வாய்ப்பு தருவது எனது மற்றொரு தொழில்’’ என்கிறார் எம்.கே செட்டியார்.

‘வாழ்க்கையின் மிக நீளமான ஐந்து விநாடிகள், யூ டியூபில் ஸ்கிப் ஆட்&க்காகக் காத்திருப்பதுதான்!’ என்பார்கள் இளைஞர்கள். அதை மனதில் வைத்தே, சொடுக்கிய மறுவிநாடி பல ஆயிரம் பதில்கள் வந்து விழுவது போன்ற வேகத்தில் தனது இணைய தளத்தை வடிவமைத்துள்ளார். காலங்கள் கடந்த பின் திரும்பிப் பார்த்தால், தாம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை என்று தோன்றியதாக கூறுகிறார்.

‘‘மார்க்கெட் ரிப்போர்ட் துறையில் இந்தியாவில் நான்தான் இன்று நம்பர் ஒன். ஆனால், நான் தொழில் தொடங்கிய காலகட்டத்தில் மார்க்கெட் ரிசர்ச் என்ற நிறுவனம், வெளிச் சந்தை பணத்தைக் கொண்டு வந்தார்கள். இன்று எங்களுக்கு நேரடி போட்டியாளராக அமெரிக்காவில் இருந்தாலும், குறுகிய காலத்தில் பெரும் பணம் செய்து விட்டனர். நாம் அதுபோல எக்காலத்திலும் ரிஸ்க் எடுக்க மாட்டோம். அடுத்த சந்ததியும் அப்படி இருக்கக் கூடாது.

இந்தியாவின், தமிழகத்தின் பெரும் பணக்காரர்களில் நம்மவர்கள் எவரும் இல்லாததற்கு நம்மிடம் ரிஸ்க் எடுக்கும் தன்மை இல்லாமையும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்…’’ என்று ஆதங்கப்பட்டவர், இளைஞர்களுக்கு சில தகவல்களைச் சொன்னார்.

‘‘நாம பண்ற தொழிலில் உள்ள நேரடிப் பிரச்னைகள் போக… நம்மைச் சுற்றி உள்ள வங்கி கியாரண்டி, அரசசட்ட திட்டங்கள் என்ற வெளிப் பிரச்னைகளும் பெரியவை. அதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

தொழிலை எப்படிக் கொண்டு செல்வது என்பதில் தொலைநோக்குப் பார்வையும், அதனை செயல்படுத்துவதற்கான அனுபவப் பின்னணியும், சிறிய முதலீடும் தேவை.

செய்யும் தொழிலில் நம்பிக்கையைப் பெற வேண்டும். யாராவது ஒருவர் கதவைத் தட்டி உங்களிடம் இருந்து பாக்கி வரவேண்டும் என்று நிற்கக் கூடாது.

பிஸினஸ் என்பதை, அய்யா வைத்திருந்த டிரங்குப் பெட்டி என்பதாக காலாகாலத்துக்கும் பாதுகாக்க வேண்டும் என்பதில்லை. தொழிலையும் ஒரு முதலீடாகப் பார்க்கும் காலமிது.

கிரிக் இன்ஃபோ வெப்சைட்டை உருவாக்கிய தமிழர், அதை பல நூறு கோடி ரூபாய்க்கு விற்றது வரலாறுதானே! இந்த தைரியம் என்னைப் போன்ற போன தலைமுறைக்குத் தான் இல்லை. இந்த தலைமுறையாவது அதைச் செயல்படுத்த வேண்டும். ‘பின்னால் வருவதை முன்கூட்டியே காட்டும் சைட் மிர்ரர் போல வாழ்க்கை இருக்க வேண்டும்’ என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. சிலரால் மட்டுமே அதைக் கணிக்க முடிகிறது. இதைத்தான் நம் சமூகப் பிள்ளைகளும் கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்…’’ என்று கோரிக்கை வைக்கிறார் எம்.கே செட்டியார்.

மனைவி நாச்சம்மை. முதல் பெண் ஹரிப்பிரியா, அமெரிக்க மருமகள். இளையவர் லட்சுமிப் பிரியா, காரைக்குடிவாசி. (சிங்கப்பூர் ஐ.பி.சி.என் மாநாட்டில் கலக்கிய மிஸ், இப்போது ஒரு வயது குழந்தைக்குத் தாய்). எம்.கே&யின் மகள்களும் இப்போது தந்தையின் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது இரண்டாம் தலைமுறைக்கான புதிய தொடக்கம். தந்தை சொல் மந்திரம், செயல்பாட்டுக்கு வரட்டும்!

பேட்டி, கட்டுரை : எஸ்.பி.அண்ணாமலை